சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே போலீசார் நடத்திய அதிரடி வாகன தணிக்கையில், 1 கிலோ 200 கிராம் கஞ்சா கடத்தி வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், சொகுசு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Continues below advertisement

சம்பவ இடத்திலேயே சிக்கிய கடத்தல் கும்பல்

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில், சீர்காழி காவல் நிலைய போலீசார் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அடுத்தடுத்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் மறித்து நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களைச் சுற்றி வளைத்து, அவர்கள் வைத்திருந்த பைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

Continues below advertisement

1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த பைகளில் சிறு சிறு பொட்டலங்களாகப் போடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறு பொட்டலங்களாக (பேக் செய்து) சில்லறை விற்பனை செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த ஏராளமான பாலித்தீன் கவர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்த 3 விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன்களையும் போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.

மூன்று இளைஞர்கள் அதிரடி கைது

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் பிடிபட்ட மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி, திருமயிலாடியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24), கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாஞ்சேரியை சேர்ந்த கௌஷிக் (வயது 18) மற்றும் கடலூர் மாவட்டம், அகரமங்கலத்தை சேர்ந்த செம்மொழியன் (வயது 19) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

காவல்துறை நடவடிக்கை

பிடிபட்ட ஸ்ரீதர், கௌஷிக், செம்மொழியன் ஆகிய மூன்று பேர் மீதும் சீர்காழி போலீசார் போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (NDPS Act) வழக்குப் பதிவு செய்து அவர்களை முறைப்படி கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு

போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவரான பாவட்டமேடு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய அபிஷேக்கை கைது செய்ய சீர்காழி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? இதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் யார்? கல்லூரி மாணவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான குண்டாஸ் சட்டம் பாயும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.