மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகே ஆழ்வார்குளம் மற்றும் மாப்படுகை பிரதான சாலை பகுதி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை ஆழ்வார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் தனது மனைவி அமலாவுடன்  கடந்த சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் அகரமாங்குடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 




இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் பீரோக்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சக்திவேலின் தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஏதும் இல்லாததால் எந்த பொருளும் திருட்டுப் போகவில்லை. 




மேலும் இதேபோன்று இந்த வீட்டின் அருகே உள்ள மாப்படுகை மெயின் ரோட்டில் வசிக்கும் 65 வயதான பழனிவேல் மற்றும் அவரது மனைவி செல்லமுத்து ஆகியோர் நேற்று தனது மகன் வீட்டுக்கு சென்னை சென்றுள்ளனர். அவரது வீட்டிலும் திருடர்கள் வீட்டின் முன்பக்க கதவு பீரோவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். அங்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. ஒரே  சாலையில் இரண்டு வீடுகளில்  கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் திருட வந்த திருடர்கள் ஏமாந்து சென்றனர். இந்த இரண்டு சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இந்திய கடற்படை துப்பாக்கி சூடு தாக்குதலில் காயம் அடைந்து மீனவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது அவர்களை கடந்த 21ஆம் தேதி இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகுகளில் இருந்தவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று சொந்த ஊரான வானகிரி திரும்பிய மீனவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். 




அதனைத் தொடர்ந்து, கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வானகிரியில் நடைபெற்று வரும் மீன்பிடி இறங்குதளம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் பள்ளியை  தரம் உயர்த்தி கூடுதல் கட்டிடங்கள் ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சுனாமியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட சுனாமி வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிதிலமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.