தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அரசு சார்பாக நியாய விலைக் கடைகள் மூலம் இலவச அரிசிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்ப வருவாயினை கணக்கிட்டு  பல்வேறு வகையாக குடும்ப அட்டைகள் வகைப்படுத்தப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு சில குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும் பல குடும்ப அட்டைகளுக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசியும், சில குடும்ப அட்டைகளுக்கு வீட்டு நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.




இவ்வாறு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச அரிசி இணை பலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நியாய விலை கடை ஊழியர்கள் ஒரு சில அதிகாரிகள் உதவியுடன் ரேஷன் அரிசி களை மூட்டை மூட்டையாக வெளிமாநிலங்களுக்கு கடத்தும் நிகழ்வும் அவ்வப்போது செய்திகளாக மக்கள் அறிந்த ஒன்றே. 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி கிராமத்தில் அரசு நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடையில் தெற்கு தெரு, வடக்கு தெரு, காலனி தெரு, சின்னபகட்டு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நியாய விலை கடை மூலம் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக இந்த  நியாயவிலைக் கடையில் ஊழியர் இல்லாததால் தற்காலிகமாக ஒரு ஊழியரை பணி அமர்த்தி நியாய விலை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. 




இங்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர் குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய அரிசியின் அளவை குறைத்து குறைவாக அரிசிகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்த பகுதி மக்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நேற்று அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல்கள் நியாய விலை கடை ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் பதறிப்போன ஊழியர் மக்களுக்கு வழங்கிய கணக்கின் படி அரிசி இல்லாமல் அதிகமாக  நியாய விலை கடையில் பதுக்கி வைத்திருந்த 15 க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை கடையின் அருகே உள்ள குளத்தில் கொட்டி விட்டு கடையினை பூட்டி சென்றுள்ளார்.




இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நியாயவிலைக் கடை ஊழியர் அரிசியை குறைவாக வந்துள்ளது என்று கூறி தங்களுக்கு வழங்க வேண்டிய அரிசியின் அளவை குறைத்து வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார், இதற்கு நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டு அதை அடுத்து, நேற்று அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல்கள் வந்தது. இதனை அறிந்த ஊழியர் அளவுக்கு அதிகமாக இருந்த அரிசியினை பதுக்கி வைக்க வழிதெரியாமல் அருகில் இருந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கொட்டி சென்றுள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை என்றும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து நவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.