மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் இன்று அரங்கேறிய சம்பவம், காவல் துறையினருக்கே சவாலாகவும், பொதுமக்களுக்கு நகைச்சுவையுடன் கூடிய ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயத்துடன் வந்த ஒரு வாலிபர், காவல் நிலையத்தின் பிரதான வாசலை மறித்து காரை நிறுத்தி, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போதையில் ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

பிரதான சாலையை மறித்த சான்ட்ரோ கார்

தலைப் பகுதியில் கட்டுடனும், ரத்தக் காயத்துடனும் காணப்பட்ட ஒரு வாலிபர், தான் ஓட்டி வந்த சான்ட்ரோ காரை (Santro Car) மயிலாடுதுறை காவல் நிலையத்தின் வாசலுக்கு நேர் எதிரே, பிரதான சாலையின் குறுக்கே நிறுத்தியுள்ளார். காவல் நிலையத்திற்குள்ளும் வெளியேயும் செல்லும் பாதையை முழுவதுமாக அடைத்தபடி அந்தக் கார் நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களும், பொதுமக்களும் இவரைத் தாண்டிச் செல்ல முடியாமல் திணறினர்.

போதையில் ரவுடிசத்தின் உச்சம்

காவல் நிலையத்தின் முன் கார் நின்று கொண்டிருந்தபோது, அந்த வாலிபர் காரில் இருந்து இறங்கி, மிதமிஞ்சிய மது போதையில் கூச்சலிடத் தொடங்கினார். தான் ஒரு பெரிய 'ரவுடி' என்றும், தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் உரத்த குரலில் கூறி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். அவர் வெளிப்படையாகப் பேசிய வார்த்தைகளும், உடல் மொழியும், அவரைச் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சமற்ற ஒருவராகக் காட்டின.

Continues below advertisement

காவல்துறையினருக்குச் சவால் - இரண்டு மணி நேர மல்லுக்கட்டு

சம்பவம் நடந்த சமயத்தில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் பணியில் இல்லாததால், அங்கிருந்த இரண்டு காவலர்கள் மட்டுமே நிலைமையைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காவலர்கள் இருவரும், போதையில் இருந்த வாலிபருடன் சமாதானம் பேச முயன்றனர். ஆனால், அந்த வாலிபரோ அவர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுத்து, தொடர்ந்து உதார் விட்டுக் கொண்டிருந்தார். அந்த இரண்டு மணி நேரமும், அந்தச் சில காவலர்கள் மட்டுமே போதை ஆசாமியைச் சமாளிக்க, தனித்துப் போராடும் நிலை ஏற்பட்டது. போதை தெளிந்தால்தான் அவர் கட்டுப்படுவார் என்பதை உணர்ந்த காவலர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

வடிவேலு காமெடி பாணியில் 'ஆம்புலன்ஸ் அட்ராசிட்டி'

உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. ரகளை செய்த வாலிபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வதில்தான் உண்மையான சவால் ஆரம்பமானது. காவலர்களும், ஆம்புலன்ஸ் பணியாளர்களும் சிரமப்பட்டு அவரை ஆம்புலன்ஸுக்குள் ஏற்றினர். ஆனால், ஏறிய அடுத்த நிமிடமே, அவர் போதையில் தடுமாறி மீண்டும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே குதித்தார்.

மீண்டும் அவரைப் பிடிக்க காவலர்கள் முயற்சி செய்கையில், அவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அந்த வாலிபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வதும், அவர் தடுமாறி கீழே இறங்குவதுமாக "வடிவேலு காமெடிகளை மிஞ்சும்" வகையிலான காட்சிகள் தொடர்ச்சியாக அரங்கேறின. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

லாரி திருட்டு முயற்சி: உண்மை பின்னணி வெளியீடு

போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், இந்த வாலிபர் குறித்த அதிர்ச்சிகரமான ஒரு பின்னணி தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்தது. இந்த வாலிபரும் இவருடன் இருந்த மேலும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து மயிலாடுதுறை பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு லாரியைத் திருட முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அப்போது, லாரி ஓட்டுநருக்கும், கிளீனருக்கும் போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த போதை ஆசாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை தாக்கியதாகப் புகாரும் வந்துள்ளது. தலைக்காயம் ஏற்பட்டதற்கு லாரி டிரைவரே காரணம் எனவும், அவர்தான் தன்னை அடித்து காவல் நிலையம் அருகே கொண்டு வந்து விட்டதாகவும் அந்த போதை ஆசாமி காவலர்களிடம் கூறியிருக்கிறார்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

இரண்டு மணி நேரப் போராட்டத்தின் முடிவில், அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை அளித்த தகவலின்படி, அவருக்குப் போதை முழுமையாகத் தெளிந்த பின்னரே அவரைச் சட்டப்படி கைது செய்ய முடியும். சிகிச்சை முடிந்ததும் அவர் மீது லாரி திருட்டு முயற்சி, தாக்குதல் மற்றும் பொது இடத்தில் ரகளை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளதாக மயிலாடுதுறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலைய வாசலிலேயே நடந்த இந்த நீண்ட நேரப் போராட்டம், நகரில் பெரும் பரபரப்பையும், சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.