ஒரு இஸ்லாமிய ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை செய்துள்ளார். ஆனால், இந்த திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். உடனே அந்த இஸ்லாமிய கணவர்,    நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Continues below advertisement

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதான இஸ்லாமியர் ஒருவர், 38 வயது பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2-வது திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த இஸ்லாமியர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவரது மனுவில், இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதாகவும், எனவே தனது 2-வது திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Continues below advertisement

இந்நிலையில், இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2-வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது எனவும், 2-வது திருமணத்தை பதிவு செய்வதற்கு முன், முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அடிப்படை உரிமைகள், மத உரிமைகளை விட முக்கியமானவை எனவும், 2-வது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இஸ்லாமிய சட்டத்தின்படி பார்த்தாலும் ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாகவும், முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2-வது திருமணம் செய்து கொள்வதை திருக்குரானோ அல்லது இஸ்லாமிய சட்டங்களோ அனுமதிக்கவில்லை என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்த முடிந்தால் மட்டுமே ஒருவர் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, ஒரு இஸ்லாமிய பெண் தனது கணவரின் 2-வது திருமணத்தில் வெறும் பார்வையாளராக, அமைதியாக இருப்பதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்த வழக்கில் அவரது முதல் மனைவியின் தரப்பு சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

குறிப்பாக அவசியம் ஏற்பட்டால், திருமணத்துக்கான வரதட்சணையை பெண் திருப்பித்தர தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்யலாம். இந்த நடைமுறை விசாரணையாக மாறக்கூடாது. திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முத்திரையை இடுவதுதான் நீதிமன்றத்தின் ஒரே பங்காக இருக்க முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.