மயிலாடுதுறையில் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி மத்திய அரசு ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
என்ன நடந்தது..?
சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் 59 வயதான வெங்கடேசன். இவர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தினமும் சென்னையில் இருந்து காரைக்கால் செல்ல முடியாது என்பதால், திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனியாக இருந்ததால் இவருக்கும் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி சுபாஷினியுடன் ஒரு புரோக்கர் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளுக்குநாள் வளரவே, இருவரும் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சுபாஷினியும், வெங்கடேசனும் ஒவ்வொரு முறையும் தனியாக இருந்தபோது, சுபாஷினி தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக, சிறுக வெங்கடேசனிடம் பணம் வாங்கியுள்ளார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்குவதற்கு பதிலாக, மொத்தமாக வெங்கடேசனிடம் இருந்து பணம் பறித்துவிடலாம் என்று சுபாஷினி திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக கடந்த 27ம் தேதி காரைக்கால் வந்த சுபாஷினி, ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு வர சொல்லி வெங்கடேசனுக்கு போன் செய்துள்ளார். தனிமையில் உல்லாசமாக இருக்கும் ஆசையில் வேகமாக வந்த வெங்கடேசனிடம் ஒன்றாக இருந்தபடியே சுபாஷினி, தனது செல்போன் மூலம் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்:
இதைதொடர்ந்து, கடந்த மே 19ம் தேதி சுபாஷினி மீண்டும் வெங்கடேசனுக்கு போன் மூலம் தொடர்புகொண்டு, மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள லாட்ஜூக்கு வர சொல்லியிருக்கிறார். இவரது திட்டத்தை அறியாது சென்ற வெங்கடேசனை, சுபாஷினி தனது கூட்டாளியான கில்லி பிரகாஷுடன் மிரட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக, கில்லி பிரகாஷ், முகமது நஷீர், தினேஷ்பாபு உள்ளிட்டவர்களின் உதவியை நாடியுள்ளார்.
வெங்கடேசன் அந்த குறிப்பிட்ட லாட்ஜூக்கு வந்ததும் சுபாஷினி உள்ளிட்ட 4 பேரும் மடக்கிபிடித்து கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து, அவரது பையில் இருந்த ஏடிஎம் கார்டை புடுங்கியது மட்டுமல்லாமல், ஜி பே வழியாக ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் பணத்தையும் பெற்று கொண்டுள்ளனர். இதுபோதாதென்று, வெங்கடேசன் சுபாஷினியுடன் தனியாக இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்று தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் மனம் நொந்துபோன வெங்கடேசன், நேற்று முன்தினம் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சுபாஷினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்கள் 4 பேரையும் மயிலாடுதுறையில் ஆஜர்படுத்திய நிலையில் கில்லி பிரகாஷ், முகமது நஷீர், தினேஷ் பாபு ஆகிய 3 பேரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும், சுபாஷினியை திருவாரூர் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.