மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆக்கூர் சிறுபுலி நாயனார் வீதியில் 7 நாட்களாக பூட்டி இருந்த சங்கர் என்பவர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 5.5 சவரன் தங்கச் செயினை திருடிச் சென்றனர். இதேபோல் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். மேலும் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் செம்பனார்கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து காவல்துறையில் விசாரணை செய்த போது ஆக்கூரில் ஐந்தரை சவரன் நகையை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான பாண்டியன் என்பவர் ஆக்கூரில் வாடகை வீட்டில் தங்கி, பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தனது உறவினரான நாகை மாவட்டம் கொத்தவாசல் பாடியைச் சேர்ந்த 57 வயதான குறசேகர் (எ) சேகர் என்பவருடன் இணைந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த குறசேகர் 35 ஆண்டுகளாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக தனிப்படை காவலர்கள் இருவரையும் கைது செய்து ஐந்தரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 35 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்காணிப்பு கேமரா உதவியால் அடையாளம் கண்டு கைது செய்த தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மற்றும் செம்பனார்கோவில் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் மயிலாடுதுறை தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவலர்கள் மயிலாடுதுறை பகுதிகளில் நடைபெற்ற ஏராளமான கொள்ளை சம்பவங்களில் விசாரணையில் ஈடுபட்டு குற்றவாளிகளை வெளிமாநில கூட சென்று விரைவாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பகுதியில் அதிகளவு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு குற்றவாளிகளை பிடிப்பது மட்டும் இன்றி அடையாளம் காணுதல் கூட முடியாத காரியமாக இருந்தது வருகிறது.