மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 400 பேரை கைது செய்து 5 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சில ஆண்டுகளாக மாதங்களாக கஞ்சா, சாராயம், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை தடுப்பது என்பது எட்டாக்கனியா இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இதனை தடுக்க தீவிரம் காட்டி வருகிறார்.
காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் கஞ்சா மற்றும் குட்கா வேட்டை நடத்தப்பட்டது. இந்த இருதினங்களிள் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதே போன்று கடந்த இருதினங்களில் நடத்தப்பட்ட குட்கா வேட்டையில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஏராளமான குட்கா பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மொத்தம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 139 குற்றவாளிகளை கைது செய்து காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து 28 கிலோ கிராம் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுநாள் வரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மொத்தம் 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 261 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து 830 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மீது தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்.பி. எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா போதை பொருடகள் விற்பனை செய்த 200 -க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்களின் விற்பனை குறித்த புகார் அளிக்க 9626169492 என்ற செல்போன் எண்ணிலும், வாட்ஸ் அப் முலமாகவும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.