மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஐயப்பன். டிரைவரான  இவர்,  அதே பகுதியை சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தை சிகப்பு நிறமாக பிறந்ததால் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த குழந்தையும் சிகப்பு நிறமாக பிறந்ததால் கணவன், மனைவி இருவரும் சிகப்பு நிறம் இல்லை என்பதால் ஐயப்பனின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. 




இதனால், ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு அகிலாவை அடித்து, உதைத்து , சிகரெட் நெருப்பால் மனைவியின் உடலில் சுட்டுவைத்தும் கடுமையாக சித்ரவதை செய்துள்ளார். ஐயப்பனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க அதனை பொறுத்துக்கொள்ள முடியாத அகிலா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அகிலாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி காலை அகிலாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஐயப்பன் தப்பிச் சென்றுள்ளார்.


ABP NADU IMPACT: வெள்ளைப்பள்ளம் கிராமத்தில் ரூ. 6 கோடியில் புதிய பாலம் - உறுதியளித்த மயிலாடுதுறை ஆட்சியர்




அகிலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த அவரது உறவினர்கள் வீட்டில் மயங்கிக்கிடந்த அகிலாவை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்ந்துள்ளார்.  அப்போது  அகிலாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து, அகிலாவின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் வாதாடிய வந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.


சீர்காழியில் நேற்று 12 கடை, இன்று ஒரு கடை....தொடரும் திருட்டு - பொதுமக்கள் பீதி




அந்த தீர்ப்பின்படி, மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குத்தாலம் காவல்துறையினர் ஐயப்பனை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மயிலாடுதுறையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.


மயிலாடுதுறை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வேதனையுடன் காத்திருக்கும் விவசாயிகள்!