தமிழகத்தில் கடைசியாக 38ஆவதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. முப்போகம் விளைவித்த இப்பகுதியில் தற்போது காவேரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பெரும்பாலும் நிலைத்தடி நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கூலி தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வங்கிகள் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டு, அழிந்து வரும் விவசாயத்தை காக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள், சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். அதுமட்டுமின்றி அடுத்த வேளை உணவுக்கே, கூலி வேலையை நம்பிதான் இருவரும் உள்ளனர்.
இப்படிப்பட்ட இருவருக்கும் மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 -ஆம் தேதி கடிதம் ஒன்றை மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி இவர்களுக்கு அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் அவர்கள் இருவரும் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து தலா 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பயிர்க் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக 1,86,831.56 ரூபாய் உள்ளது என்றும், ஜூன் 13 -ஆம் தேதியிலிருந்து பின்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளான பெருமாள் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர். விவசாய நிலமே இல்லாத தங்களுக்கு பயிர்க் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், எனவே, தங்கள் பெயரில் வங்கியில் மோசடியாக பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்களின் மீதும், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மோசடியாக பயிர் கடன் கொடுத்த வங்கியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இதேபோல் தங்கள் பகுதியில் பலரும் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Annamalai Delhi Visit: கூட்டணி முறிவு, பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..?