மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தங்க நகை செய்து வரும் தொழிலாளி கணேஷ். இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரபலமான ஒரு நகைக் கடையில் சென்று (GRT) மூக்குத்தி எடுத்துள்ளார். மூக்குத்திக்கு 450 ரூபாய் விலை உள்ள நிலையில், இதற்கான செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவை சேர்த்து 690 ரூபாய் வந்துள்ளது. வாங்கும் பொழுதே தான் ஒரு நகை தொழிலாளி என்பதால் செய்கூலி சேதாரம் போடக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவரை நகை கடை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். 




இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சென்று உற்சாக பானம் ஏற்றிக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்த கணேசன், சட்டையை கழற்றி விட்டு வெறும் வேட்டியுடன் நகை கடை அமைந்துள்ள முக்கிய கடைவீதியில் சாலையில் கடை வாசலில் நின்று கொண்டு அருவருப்பான வார்த்தைகளால் தாறுமாறாக பேசத் துவங்கினார். 450 ரூபாய் நகைக்கு 250 ரூபாய் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தனது பணத்தை கொள்ளையடிப்பதாகவும், பணத்தை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறி அலப்பறையில் ஈடுபட்டார். 





Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நகைக்கடை காவலாளிகள் அவரை சமாளிக்க முடியாமல் மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து அங்கு இரண்டு காவலர்கள் வந்தனர். உங்களிடம் பேச முடியாது போய் காவல்துறை கண்காணிப்பாளர் SP யை வரச்சொல் என்று காவலர்களிடம் வீராவேசம் பேசினார்.  இதனை அடுத்து தனியாக வந்த காவலர் விட்டால் போதும் என்று வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறகு  வந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நகைக்கடை வாசலில் தங்கநகை செய்யும் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் மேற்கொண்ட அலப்பறை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 





ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், நடுத்தர ஏழை மக்களும் அவர்களின் சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கடினப்பட்டு சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு பொருட்கள் வாங்க சென்றால் அதில் ஒரு பெரும் பகுதி ஜிஎஸ்டி க்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்து வருகின்ற நிலையில், ஒரு ஏழை தொழிலாளி 450 ரூபாய்க்கு 250 கூடுதலாக கட்ட வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழைத் தொழிலாளி ஆதங்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நகைக்கடையில் உள்ளவர்களோ, பொதுமக்கள் யாரும் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து அவரை முகவரியை பெற்றுக்கொண்டு அவரின் உறவினர்களை வரவழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.