மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரக்கு உட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பவரின் மகன் 53 வயதான மகாதேவன். இவரது மனைவி 37 வயதான அமுதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையில் மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மனைவியிடம் சண்டை போட்டு 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு டாஸ்மாக் சென்று குடித்துவிட்டு, மேலும் இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து மனைவி கேட்டதை தொடர்ந்து மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜ சோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றுப் பகுதி மற்றும் கையில் கிழித்துள்ளார். இதனை தடுத்த மனைவியை அருவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கையில் இருந்த அருவாளை பிடுங்கிய மனைவி கணவனின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து மகாதேவனின் மனைவி அமுதா தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று கணவனை கொன்று விட்டதாக சரணடைந்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணல்மேடு காவல்நிலைய காவலர்கள் மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல தாய்மார்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். முந்தைய அரசும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சரி மதுபான கடைகளை மூடாமல் இது போன்று பல குடும்பங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது. போன்ற நிகழ்வுகளை அரசு கவனத்தில் எடுத்து மதுபான கடைகளை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்