கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி, போதைப் பொருளை,90 கேப்சல்களில் அடைத்து, வயிற்றில் விழுங்கிக் கொண்டு வந்ததை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து, பெண் பயனியை கைது செய்து மேலும் விசாரணை. பெண் பயணியை, அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து, மருத்துவர்கள் உதவியுடன், 2 நாட்கள் முயற்சி செய்து, 90 கேப்சல்களையும் வெளியில் எடுத்து, போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையம்
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில், சென்னைக்கு வந்தார். அந்தக் கண்ணிய நாட்டுப் பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து கென்யா நாட்டுப் பயணியை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரணை நடத்தினர்.
வயிற்றுக்குள் கேப்சல்கள்
அதோடு பெண் சுங்க அதிகாரிகள், அவரை முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்தப் பெண் பயணியை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் பெரிய அளவிலான கேப்சல்கள் மாத்திரைகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து அந்தப் பெண் பயணியை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவர்களின் உதவியுடன், இனிமா கொடுத்து, வயிற்றுக்குள் இருக்கும் கேப்சல்களை, கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்தனர். இந்தப் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு கென்யா நாட்டுப் பெண் பயணி வயிற்றுக்குள் இருந்து மொத்தம், 90 கேப்சல்கள் வெளியில் எடுக்கப்பட்டன.
1.24 கிலோ கொக்கையன்
அதன் பின்பு அந்த கேப்சல்களை சுங்க அதிகாரிகள் உடைத்து பரிசோதித்த போது, மிகவும் விலை உயர்ந்த கோக்கையின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். 90 கேப்சில்களிலும் மொத்தம் 1.24 கிலோ கொக்கையன் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 14.2 கோடி.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கென்யா நாட்டு பெண் பயணியை மீண்டும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரை கைது செய்தனர். அதோடு ரூ.14.2 கோடி மதிப்புடைய கொக்கையன் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை
அந்த பெண் பயணியிடம் சுங்க அதிகாரிகள் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலில், போதை கடத்தல் குருவியாக பணியில் இருப்பதாகவும், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் ஏற்கனவே இதை போல் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சில முறை வந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்தது. எனவே இவர் ஏற்கனவே டெல்லி மும்பைக்கும் இதை போல் போதை பொருளை கடத்தி இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.
மேலும் இந்த கென்யா நாட்டுப் பெண், சென்னையில் யாரிடம் இந்த போதைப் பொருளை கொடுக்க வந்தார்? சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள், சென்னையில் யார் யார் இருக்கின்றனர்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கென்யா நாட்டுப் பெண் பயணியிடம் இருந்து, ரூ. 14.2 கோடி மதிப்புடைய கொக்கையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.