மயிலாடுதுறை அருகே கடனை வசூலிக்க ரவுடிகளுடன் வந்து வீட்டில் புகுந்து அவமானப்படுத்திய தனியார் வங்கியால் மனம் உடைந்த விவசாயி பம்பு செட்டில் தூக்கு போட்டு தற்கொலை  செய்துகொண்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கப்பூர் ஊராட்சி மேல தெருவை சேர்ந்தவர் 35 வயதான வினோத்குமார். இவருக்கு சொந்தமாக சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. திருமணம் ஆகி ஐஸ்வர்யா என்ற மனைவியும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா காலக்கட்டதிற்கு முன்பு வரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா உரடங்கு காரணமாக ஊருக்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டார்.




அப்போது கடந்த 2021-ம் ஆண்டு இவர் வீட்டின் பேரில் மயிலாடுதுறை தனியார் நிதி நிறுவன வங்கியில்  8 லட்சம் ரூபாய் கடன் பெற்று நெல் அறுவடை இயந்திரம் வாங்கியுள்ளார். தொடர்ந்து  விவசாய தொழில் எதிர்பார்த்த அளவு செல்லாத காரணத்தால் பணம் திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.  மாதம் 17 ஆயிரத்து 500 ரூபாய் தவணை தொகை கட்டி வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வரை 6 மாதம் தவணைத் தொகை கட்டாமல் நிலுவையில் இருந்த நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். 


அதற்குப் பின் ஆகஸ்ட் மாதத்திற்கு கட்டவேண்டிய தவணை தொகையை கட்டுவதற்கு தாமதமான காரணத்தால் வங்கி ஊழியர்கள் அடியாட்களுடன் அவரது வீட்டிற்கு சென்று நோட்டீஸ் ஒட்டி அவரது மனைவி மற்றும் உறவினர்களை தகாத வார்த்தையில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் வந்து மிரட்டல் விடுவதாகவும், இதனால் மனமுடைந்த வினோத்குமார் தனது வயல்வெளிக்கு சென்று மோட்டார் பம்ப் செட்டில் கைலி மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 




வினோத்குமார் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அவரை தேடி அவரது உறவினர்கள் சென்று பார்க்கையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் வினோத்குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் கடன் கொடுத்துவிட்டு கழுத்தை நெரிப்பது போல் அடியாட்கள் மூலம் அராஜகத்தில் ஈடுபட்ட வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும், குற்றம் சாட்டிய உறவினர்கள் இறந்தவர் உடலை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Israel - Palestinian War: இந்தியா - இஸ்ரேல்.. நட்பு நாடுகளுக்கு எதிராக குவியும் அமெரிக்க ஆயுதங்கள் - வியாபாரத்தின் கோர முகமா?


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)