Israel - Palestinian War: அமெரிக்காவின் மிகப்பெரிய நட்பு நாடுகளுக்கு எதிராக, அந்நாட்டின் பயங்கர ஆயுதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
தீவிரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்:
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலிலி ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாகக் பிடிக்கப்பட்ட பிறகு, காசாவில் நடந்த கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அந்த வீடியோ காட்சிகளில் காணப்பட்ட பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்காவை சேர்ந்தது. குறிப்பாக M14 தாக்குதல் துப்பாக்கிகளை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் பயன்படுத்தியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஆயுதங்களின் ஆதாரம் ஆப்கானிஸ்தானா அல்லது உக்ரைனா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா தயாரித்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக இந்தியாவும் தொடர்ந்து புகார் அளித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் நட்பு நாடுகள்.
நீடிக்கும் கேள்வி:
இந்தியாவானது அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும் வேளையில், அங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கைகளுக்கு எப்படிச் செல்கின்றன என்பது நீண்ட காலமாக கேள்வியாகவே நிலவுகிறது.
அமெரிக்காவின் ஆயுத விற்பனை:
எண்ணற்ற உயிர்களை பலி வாங்குவதோடு, உலகம் முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மோசமான நிகழ்வு தான் போர். ஆனால் இது பெரும் வணிகமாகவும் உள்ளது. ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளரான அமெரிக்கா, அந்த பெரிய போர் வணிகத்தின் மையத்தில் உள்ளது. 2013-17 மற்றும் 2018-22 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2018-22 காலகட்டத்தில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 40 சதவீதமாக இருந்தது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் தெரிவித்து இருந்தது. ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதோடு, வரலாற்றின் பல்வேறு போர்களிலும் ஆயுதங்களை குவித்து வருவதை அமெரிக்கா தொடர்ந்து செய்து வருகிறது.
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்கப் போரில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அங்கு குவிக்கப்பட்டன. ஆனால் ஆப்கானிஸ்தான் எந்த ஒரு வெளிநாட்டுப் படைக்கும் எளிதான பிரதேசமாக இருந்ததில்லை. 1988 இல் சோவியத் ரஷ்யா தாக்குதலைப் போலவே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பிரச்சாரமும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. அவ்வாறு அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டாலும், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டன. தற்போது அவை தாலிபான் வசமுள்ளன.
தீவிரவாதிகள் வசம் உள்ள அமெரிக்க ஆயுதங்கள்:
அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் பிளாக் ஹாக்ஸ் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு பணிகளுக்கான ராணுவ ட்ரோன்கள், M16 தாக்குதல் துப்பாக்கிகள், M4 கார்பைன்ஸ் ஆகியவை தாலிபான்கள் வசம் உள்ளன. இதேபோன்று, M4, M16 மற்றும் பிற அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. வீரர்களின் புல்லட் ஃபுரூப் உடைகளையே துளைக்கும் வகையிலான, ஸ்டீல் கோர் தோட்டாக்களும் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இஸ்ரேலிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. தீவிரவாதிகளிடம் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட துப்பாக்கிகள் ஏகே-சீரிஸ் துப்பாக்கிகளை விட, அதிநவீனமானவை என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கவலை அளிக்கிறது.
பாகிஸ்தான் விநியோகிக்கும் ஆயுதங்கள்?
பாகிஸ்தான் தனது ராணுவத்தால் பயன்படுத்தப்படும் M4 கார்பைன்களை தீவிரவாதிகளுக்கு வழங்குவதாக சில குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதற்கு உதாரணமாக பெஷாவர் அருகே உள்ள தர்ரா ஆடம் கெல் உட்பட பாகிஸ்தானில் ஏராளமான ஆயுத சந்தைகள் செயல்படுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வார் உல் ஹக் கக்கர் கடந்த மாதம் பேசுகையில், அமெரிக்க ராணுவ உபகரணங்களான துப்பாக்கிகள் முதல் இரவு பார்வை கண்ணாடிகள் வரை, பாகிஸ்தான் தலிபான் அல்லது தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பினருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அவர்கள் கருப்புச் சந்தையில் அமெரிக்க ஆயுதங்களை விற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே, காஷ்மீரில் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான ஆயுதங்கள் ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு சொந்தமானது எனவும் தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலிலும் அமெரிக்க ஆயுதங்கள்:
இந்நிலையில், இஸ்ரேலிற்கு எதிரான பாலஸ்தீன தாக்குதலிலும் அமெரிக்காவின் ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. கடந்த 5ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய M-16 துப்பாக்கியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. M-16 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு அதிநவீன தாக்குதல் துப்பாக்கியாகும், இது ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் எதிரிகளிடம் வந்து சேரக்கூடும் என்று ஏற்கனவே அந்நாடு கவலை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை எடுக்குமா அமெரிக்கா?
அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக அந்நாட்டின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்தப் பிரச்னையை குறைக்கவோ, தடுக்கவோ அமெரிக்கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆயுதப் பெருக்கத்தின் பரவலான மற்றும் கணிக்க முடியாத விளைவுகளின் வெளிப்பாடாக தான், அடுத்தடுத்து நிகழும் இந்த சம்பவங்கள் காட்சியளிக்கின்றன.