தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் தமன் இசையமைப்பாளராக  அறிமுகமானது 2009-ஆம் ஆண்டு வெளியான 'சிந்தனை செய்' திரைப்படத்தில். பின்னணி இசையிலும் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும் தமன் இதுவரையில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கும் ஏராளமான இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

பாரம்பரியமான இசை குடும்பம் :


மிகவும் பாரம்பரியமான இசை குடும்பத்தில்  இருந்து வந்தவர் தமன். மிகவும் பிரபலமான திரைப்பட தயரிப்பாளரான கண்டசாலா பலராமய்யாவின் பேரனாவார். தமனின் தந்தை கண்டசாலா சிவகுமார், ஏராளமான திரைப்படங்களுக்கு டிரம்மராக இருந்துள்ளார். மேலும் தாயார், சகோதரி, அத்தை, மனைவி என பலரும் இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்டாசாலா சாய் ஸ்ரீனிவாஸ் தமன் என்பதே சுருங்கி எஸ்.எஸ்.தமனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 


ஜாம்பவான்களின் சிஷ்யன்:

 
தமன் தனது தந்தையை 9 வயதில் இழந்த பிறகு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு இசை மீது கவனம் செலுத்த துவங்கினார். தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜ்-கோடி இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், மணிஷர்மா, சிவமணி, கோட்டி என மிகவும் பிரபலமாக இருந்த ஏராளமான இசை கலைஞர்களிடம் பணியாற்றியுள்ளார்.


ஷங்கர் -  தமன் கூட்டணி : 


அடிப்படையில் தொழில்முறை டிரம்மர் மற்றும் பின்னணிப் பாடகரான தமன் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்ததை ஏற்றுக்கொண்டு நடித்திருந்தார். மீண்டும் இசைக்கு திரும்பிய தமன் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு கொடுத்த பப்ளிசிட்டி :

 

கிக்,பாடிகார்ட், நாயக், ராமய்யா வஸ்தாவய்யா, டைகர், பிசினஸ்மேன், பீம்லா நாயக், அல வைகுண்டபுரம், ராதே ஷ்யாம் என ஏராளமான சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என குத்தாட்டம் போட வைத்தார்.

அட இவரா :

 

இது தவிர அய்யனார், ஒஸ்தி, மம்பட்டியான், காஞ்சனா 2, வந்தான் வென்றான், காதலில் சொதப்புவது எப்படி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, வாலு, மீகாமன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களுக்கும் தமன் தான் இசையமைத்துள்ளார் என்பது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒன்று.

 



அப்பாவின் நினைவு நாள்:

 

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் தன்னுடைய தந்தையின்  நினைவு நாளில் அவரை பற்றி  ஒரு போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். "நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 28 ஆண்டுகள் ஓடிவிட்டன என்பது கடினமாக இருக்கிறது. இருப்பினும் நீங்கள் எங்களோடு தான் இருந்து வழிநடத்தி அழைத்து செல்கிறீர்கள்... லவ் யூ நானா" எந்த பதிவிட்டு உள்ளார் .