தமிழகத்தில் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம். இதில் சீர்காழி , மயிலாடுதுறை ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. மயிலாடுதுறை நகராட்சி மொத்தம் 36 வார்டுகளை கொண்டது. மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தாமல், நகர் முழுவதும் அவ்வப்போது இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவது ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஏராளமான கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் உருவாகும் கோழி கழிவுகளை பல கோழி இறைச்சி விற்பனையாளர்கள் பலர் அரசு கூற வழிகாட்டி நெறிமுறைகள் படி முறையாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கு விதிவிலக்காக சிலர் அரசு விதிகளை காற்றில் பறக்க விட்டு விதிமுறைகளுக்கு எதிராக, நீர்நிலைகள், திடல்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் என சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக வீசி செல்கின்றனர். இதனை உண்ணும் நாய்கள் வெறிபிடித்து மனிதர்களை கடிப்பது போன்ற சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே.ஆர் பகுதியில் திருவிழந்தூர் - கூரைநாடு செல்லும் பாதையில் தொடர்ந்து கோழி இறைச்சி கழிவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இதனை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தாமல் இருந்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பொதுமக்களின் தொடர் அழுத்தம் காரணமாக நகராட்சி நிர்வாகம் கோழி கழிவுகளை கொட்டும் நபர்களை தடுக்க முடியாமல் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் செலவில் பாலம், தார் சாலை அமைக்கப்பட்ட பொது சாலையை அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் கோழி இறைச்சி கழிவுகளை அரசு விதிமுறைகளை பின் பற்றி அப்புறபடுத்தாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்களை தண்டிக்க அச்சத்தில் நகராட்சி நிர்வாகம் மக்கள் வரி பணத்தை வீண் செய்யும் விதமாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை பாலங்கள் அமைந்துள்ள நிலையில் அந்த சாலையை மூடியது கண்டனத்துக்கு உரியது என்றும், பல இடங்களில் சாலை வசதி இன்றி மக்கள் சாலை வசதிக்காக போராடும் நிலையில் இருக்கும் தார் சாலையை அடைத்துள்ளது மாபெரும் தவறு.
Vandalur Crocodile: வண்டலூரில் வலம் வந்த முதலை.. எங்கிருந்து, எப்படி வந்தது? - வெளியான புது தகவல்
எல்லாவற்றுக்கும் மேலாக இதுகுறித்து தகவல் அறிந்து ஆட்சியர் சாலையின் தடுப்பை அகற்ற உத்தரவிட்டும், பல நாட்கள் கடந்தும் நகராட்சி ஆணையர் அதனை காதில் வாங்கிக்கொள்ளலாமல் இருந்து வருவது கண்டனத்துக்கு உரியது எனவும், மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட தார்சாலையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் இந்த மூடப்பட்ட தார் சாலைக்கு மின்விளக்கு அமைக்க நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.