மிரட்டி எடுக்கும் மிக்ஜாம் புயலால், தலைநகர் சென்னையே மிதக்கும் சூழலில், வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி, காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 


மிக்ஜாம் புயல் அதன் தாக்குதலை தொடங்கி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்


அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


ரயில், வான் போக்குவரத்து நிறுத்தம்


அதேபோல ரயில், வான் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை (டிச. 5) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால், மழை வடிய முடியாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் முந்தைய காலத்தில் நீர்நிலைகளாக இருந்த வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி ஆகியவை வீடுகளாக மாறிய பிறகும் வெள்ளத்தால் மூழ்கி நிற்கின்றன. மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.


 



வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்


இதற்கிடையே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள காசா கிராண்ட் அடுக்கு மாடிக் குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் இங்கு கார்களே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி, காண்போரைப் பதற வைத்துள்ளது.