மயிலாடுதுறை அடுத்த திருவாரூர் சாலை கேணிக்கரைத் தெருவைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண்ணும்,  தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி உதயசூரியன் தெருவைச் சேர்ந்த இளஞ்செழியன் மகன் குபேந்திரன் (23) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 20-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் குபேந்திரனும், அந்த பெண்ணும் மயிலாடுதுறையிலிருந்து முளப்பாக்கம் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முளப்பாக்கம் பழைய தரங்கம்பாடி ரயில்வே சாலை அருகே  சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவர், காதல் ஜோடி வந்த பைக்கை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் குபேந்திரனை ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். 




இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கூச்சலிட மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.- சம்பவத்தை வெளியில் சொன்னால், காதலுடன் வெளியில் சென்றது தெரிந்து விடும் என்கிற பயத்தில் இளம் பெண், விபரத்தை பெற்றோர்களிடம் மறைத்துள்ளார். இதை அறிந்த அந்த இருவரும், நேற்று முன்தினம் இளம் பெண் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நடந்ததை கூறி விடுவோம் என தாங்கள் முன்பு மிரட்டிய சம்பவத்தைக் நினைவு கூறி, இளம் பெண்ணை மீண்டும் மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தருமாறு கேட்டுள்ளனர். விவரம் பூதாகரமாக செல்வதை உணர்ந்த அந்த பெண், சம்பவத்தை பெற்றோரிடத்தில் கூறியுள்ளார். 


இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு  இளம் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் கொடுத்த மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜித்குமார் (24), செருதியூர் கீழத்தெருவை சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாலசுப்ரமணியன் (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அஜித்குமார், பாலசுப்ரமணியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல இளைஞர்கள் பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.