கேரளாவில் முன்னாள் திருடனாக இருந்து, தனது வாழ்க்கை வரலாறு மூலமாக புகழ்பெற்ற மணியன் பிள்ளை தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். Behindwoods Ice என்ற மலையாள யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கத்தி முனையில் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்துள்ளார் மணியன் பிள்ளை. கேரள மாநில மகளிர் ஆணையம் இதுகுறித்து தாமாகவே முன்வந்து வழக்கு தொடுத்திருப்பதோடு, காவல்துறை மணியன் பிள்ளை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், மணியன் பிள்ளையின் நேர்காணலை ஒளிபரப்பு செய்த யூட்யூப் சேனல் மீதும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறும் பரிந்துரை செய்துள்ளது.


முகத்தில் புன்னகையோடு, யூட்யூப் சேனல் நிருபர் மணியன் பிள்ளையிடம், `ஏதாவது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் போது, அங்கு அழகிய பெண் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இரவில் அணியும் உடையை அணிந்தோ, நிர்வாணமாகவோ இருந்தால், அவர்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு வந்துள்ளதா?’ என்று கேள்வியை முன்வைக்கிறார். அதற்கு மணியன் பிள்ளை, `அதுபோல பல பெண்களைப் பார்த்துள்ளேன். ஆனால் அப்படி பார்த்ததில், ஒரு பெண்ணை மட்டும் விரும்பினேன்’ என்று தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்து தொடர்ந்து பேசுகிறார்.



`நான் அந்த வீட்டிற்குள் நுழையும் போது, விளக்குகள் அணைக்கப்படவில்லை. அங்கு ஒரு பெண் கையில் புத்தகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் மிகவும் மெலிதான ஆடையை அணிந்திருந்தார். அவருக்கு 22 வயது இருக்கலாம். அவரது தங்கம் போன்ற தோலைக் கண்டு, அவர்மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நான் பல பெண்களைப் பார்த்திருந்தாலும், இந்தப் பெண் ஒரு தேவதையைப் போல இருந்தார். என்னால் அதனை மறக்கவே முடியாது. அவரை மட்டுமே நான் பயன்படுத்தியிருக்கிறேன்’ என்று அதன்பிறகு கத்தி முனையில் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததை விவரித்துள்ளார் மணியன் பிள்ளை.  


இந்த நேர்காணல் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் thumbnail பகுதியில், `22 வயது தங்க நிறத் தோல் கொண்ட பெண்ணுக்கு நான் என்ன செய்தேன்?.. பிரபல திருடனின் வாக்குமூலம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஊடக நெறிகளுக்கு எதிராகக் கருதப்படுகிறது. 



கேரளாவில் சிறிய திருடனாக இருந்த மணியன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் புத்தகமாக வெளியிட்ட பிறகு, மிகவும் பிரபலமடைந்தார். 1980களில் மணியன் பிள்ளை தான் கொள்ளையடித்த பணத்தை வைத்து கர்நாடகாவில் வாழத் தொடங்கினார். அங்கு நடைபெற்ற தேர்தல்களில் பிரதான கட்சி ஒன்றில் சேர்ந்து, அவருக்கு சட்டமன்ற வேட்பாளர் சீட்டும் வழங்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்பட்டார். பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணியன் பிள்ளையின் புத்தகம் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உண்டு. இந்நிலையில் திருட்டைத் தாண்டி, பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை மணியன் பிள்ளை பொதுவெளியில் பதிவுசெய்திருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  


கடந்த அக்டோபர் 13 அன்று, கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சதிதேவி காவல்துறையிடம் மணியன் பிள்ளை மீது பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒளிபரப்பிய யூட்யூப் சேனல் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.