Udanpirappe Movie Review: 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட படம் என்பது வெளியாகும் முன்பே பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்று தான். அந்த காரணத்திற்காக தான் படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் இருந்தது. 


உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்கு காரணமாகிறது. பத்து, பதினைஞ்சு ஆண்டுகளாக பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்கு பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விட திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரனாக(யார் வீட்டுக்கு என கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்) சூரி மற்றும் பலர்! 


 


ஜோதிகாவின் 50வது படம். ஜோதிகாவை சுற்றிய கதைகளம். ஆனால் அதில் நிறைய ஓட்டைகள். கிணற்றில் இரு குழந்தைகள் தவறி விழுகிறது. ஏதாவது ஒரு குழந்தையை தான் காப்பாற்ற முடியும் என்கிற நிர்பந்தம். தன் குழந்தையை கழற்றிவிட்டு, அண்ணன் குழந்தையை காப்பாற்றுகிறார் ஜோதிகா. பாசம் என்பது அண்ணன்-தங்கை இடையே தானா? பெற்ற குழந்தையிடம் ஒரு தாய் எப்படி அந்த பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்? அப்படி முடியும் படியான கல் நெஞ்சம் இருந்தால், எப்படி அண்ணனுக்கு மட்டும் இவ்வளவு பாசமாக இருக்க முடியும்? என்கிற அடிப்படை கேள்வி வராமல் இல்லை. இப்படி பல கேள்விகள் படம் முழுக்க வலம் வருகிறது. 


அடிதடிக்காரர்... என்பது தான் சசிக்குமார் மீதான குற்றச்சாட்டு. அதுமாதிரியான அழுத்தமான காட்சி, ஒரு இடத்தில் கூட இல்லை. கொம்பன் படத்தில் வரும் ராஜ்கிரண் போல, முறைப்பதும், விழிப்பதுமாய் குளோஸ்-அப் ஷாட்டுகள் மட்டுமே வைக்கப்படுகிறது. அவர் அப்படி யாரையும் அடித்து துவம்சம் செய்ததாக காட்சிப்படுத்தவில்லை என்பது அந்த கேரக்டரை அடிப்படையில் செயலிழக்கச் செய்கிறது. ஏதாவது ஒரு டுவிஸ்ட் வரும்... வரும்... என காத்திருந்தால், கடைசி வரை அப்படி எதுவும் வந்ததாக தெரியவில்லை. 


சரி... அடுத்ததாக சமுத்திரக்கனியிடம் செல்வோம்... சமுத்திரக்கனி ஒரு நேர்மையான ஆள். அவருக்கு அடிதடியெல்லாம் பிடிக்காது. அந்த பக்கமே இருக்கமாட்டேன் என்கிற ஆள். அவர் எப்படி அடிதடி ஆரவாரம் செய்வதாக கூறப்படும் சசிக்குமார் குடும்பத்தில் பெண் எடுத்தார்? எல்லாம் தெரிந்து திருமணம் செய்துவிட்டு, பின்நாளில் அவர் அப்படி, இப்படி என வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது கொஞ்சம் சறுக்கல் தான். அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான அம்சங்களை திரைக்கதையில் பொருத்தவில்லை என்பதும் ஒரு வீக் பாய்ண்ட். 


இப்படி கதையின் முக்கிய மூன்று கேரக்டர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் குணாதிசயத்தையும் தெளிவாக காட்டாமல் போனது படத்திற்கு பெரிய பெரிய மைனஸ். வெறுமனே அண்ணன்... தங்கை... என பிஜிஎம்., போட்டால் போதும் என்கிற மனநிலை, சென்டிமெண்ட் படத்திற்கு செட் ஆகாது என்பதை உடன்பிறப்பே தெளிவாக காட்டிவிட்டது. இதற்கு முன்பாக வெளியான கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பாசப்பின்னணி கொண்ட படங்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவை, உடன்பிறப்பே திரைக்கதையில் இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவித்தே ஆக வேண்டும். 


ஜோ... உண்மையில் பல இடங்களில் ராதிகாவைப் போலவே தோற்றம் தெரிகிறார். இரட்டை மூக்குத்தியில் டெல்டா பெண்ணாகவே மாறியிருக்கும் ஜோதிகா, தன் தலை முடியால் கொலை செய்யும் காட்சியில் தெறிக்கவிடுகிறார். பிரிவை நினைத்து அழும் போதும், அண்ணன் குடும்பத்தில் சம்மந்தம் செய்யும் போது மகிழும் போதும், கணவனிடம் தவிக்கும் போதும், ஒரு கட்டத்தில் கொலை செய்யும் போதும்... அந்தந்த கதாபாத்திரமாகவே மாறும் ஜோதிகாவின் நடிப்பு படத்திற்கு ஆறுதல். 


காதல் என்பதை கடுகளவு கூட சேர்க்காமல், நேரடியாக குடும்பத்திலிருந்து தொடங்கும் கதை. ஒருபுறம் சமுத்திரகனி-ஜோதிகா, மற்றொருபுறம் சசிக்குமார்-சிஜா ரோஸ். 50யை கடந்த கதாபாத்திரங்கள் என்பதால் அங்கு காதல் தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதுவும் சுவாரஸ்யம் குறைய காரணமாக இருந்திருக்கலாம். சரி... சசிக்குமாரின் மகனும், ஜோதிகாவும் மகளும் காதல் செய்வார்கள் என்று பார்த்தால், ஒரு பாடலோடு அவர்களின் பக்கங்கள் மூடப்பட்டது. 


படம் தொய்வாக மிக முக்கிய காரணம். சூரியை பயன்படுத்த தவறியது. முன்பு சொன்ன கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை வெற்றியில் பெரிய பலமாக இருந்தவர் சூரி. இங்கு சூரியை சரிவர பயன்படுத்தவில்லை. அவர் ஸ்கோர் செய்ய எந்த அம்சமும் அங்கு இல்லை. அவர் கிச்சுகிச்சு மூட்டும் காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். நல்லவன் வேஷம் போடும் வில்லன் கதாபாத்திரம் கலையரசனுக்கு. அவர் அப்படி தான் என்பது கிட்டத்தட்ட முதல் காட்சியில் தெரிந்துவிட்டது. ஆனாலும், இயக்குனர் சஸ்பென்ஸ் தருகிறேன் என்கிற பெயரில், அவர் தொடர்பான காட்சிகளை நகர்த்துகிறார். காதல் இல்லை, காமெடி இல்லை, பல இடங்களில் சென்டிமெண்ட் கூட அழுத்தமாக இல்லை. அதனால் 2:15 மணி நேர திரைப்படம், எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பை தந்துவிடுகிறது. 


குறை சொல்வது எளிது... ஆனால் அப்பட்டமாக குறைகளை கண்டுபிடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் இயக்குனர். அதற்கு திரைக்கதையே போதும். அழ வைக்க வேண்டும் என்கிற அதீத ஆசை இருந்திருக்கிறது. ஓரிரு இடங்களில் அது நடந்தும் இருக்கிறது. ஆனால், வழிநெடுகிலும் அழ வைக்கிறேன் என்கிற பெயரில், விழுந்திருக்கிறார்கள். கதை என்கிற வகையில் ஓகே. திரைக்கதை என்று பார்த்தால் உடன்பிறப்பே... உதவாத பிறப்பாக தான் இருக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு மட்டுமே அதில் ஆறுதல். இதற்கு இவ்வளவு போதும் என இசையமைப்பாளர் இமான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார் போலும். அவுட் புட் அப்படி தான் இருக்கிறது. சட்டியில் இருந்தால் தானேஅகப்பையில் வரும், இதில் வெட்டி ஓட்டியவரை என்ன செய்ய முடியும்... ரூபனின் படத்தொகுப்பை அப்படி தான் சொல்லத் தோன்றுகிறது. கத்துக்குட்டி திரைப்படத்தில் அறிமுகமான இயக்குனர் இரா.சரவணன், கத்துக்குட்டியில் இருந்து மீண்டு வரவேண்டும். உடன்பிறப்பு... பார்த்து முடிக்கும் போது மறுபிறப்பாக தெரிகிறது.