சகோதர, சகோதரி பாசத்தைப் பறைசாற்றக் கொண்டாடப்படும் ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சி உயிர்ப்பலியுடன் சோகத்தில் முடிந்த சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.


பிஹார் மாநிலம் சரண் எனும் பகுதியைச் சேர்ந்தவர் மன்மோகன். 25 வயது நிரம்பிய இந்த இளைஞர் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் தொழில் செய்துவந்தார்.


இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு அவர் தனது இரண்டு பாம்புகளுக்கும் ராக்கி கட்ட முயன்றுள்ளார். அப்போது பயத்தில் ஒரு பாம்பு மன்மோகனைத் தீண்ட அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சைக்கு வருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இணையத்தில் வைரலான வீடியோ:


இளைஞர் மன்மோகன் பாம்புக்கு ராக்கி கட்ட முற்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் மன்மோகன் ஒரு பாம்பின் நெற்றியில் குங்குமம் வைக்க முயற்சிக்கிறார். அப்போது இன்னொரு பாம்பு அவர் கைகளில் இருந்து மெதுவாக நழுவி அவரின் காலில் தீண்டுகிறது. சுதாரித்துக் கொண்டு எழுந்து நிற்கிறார் மன்மோகன். முதலில் நிதானமாகக் காணப்படும் அவர் விநாடிகளில் சரிந்து விழுகிறார். இந்த வீடியோ காண்போரை கதிகலங்கச் செய்கிறது. அவர் இந்தப் பூஜையை செய்யும்போது சுற்றியும் கிராமவாசிகள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கொண்டாட்டம் என்றாலும் ஓர் அளவு வேண்டாமா என்று சொல்ல வைக்கிறது இந்த வீடியோ.




பாம்பாட்டியின் கால் கட்டைவிரலில் தீண்டும் பாம்பு..


ரக்‌ஷாபந்தன் என்ற நாள் வட இந்தியர்களால், சகோதர சகோதரி பாசத்தைப் பறைசாற்றக் கொண்டாடப்படும் நாள். ரக்‌ஷாபந்தன் நாளில், சகோதரி சகோதரரின் கையில் ஒரு கயிற்றைக் காட்டி அண்ணனுக்கு நீண்ட ஆயுள் தர இறைவனை வேண்டிக் கொள்வார்.


பதிலுக்கு, சகோதரன் வாக்குறுதியை அளிப்பார்ன். அந்த வாக்குறுதியில் காலம் முழுவதும் சகோதரியை அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விலக்கிக் காப்பேன் என்பார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின்போது பரஸ்பரம் பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.


இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் இந்துக்களின் காலண்டரின்படி ஷ்ரவன் மாதத்தில் பெளர்ணமி நன்னாளில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு இது நாளை ஆகஸ்ட் 22 கொண்டாடப்பட்டது.


ரக்‌ஷா பந்தன் வரலாறு:


ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் மகாபாரத புராணக் கதையுடன் தொடர்புடையது. கிருஷ்ண பரமாத்மா ஒருமுறை பட்டம் விடும்போது அவரது கைவிரலில் நூல் அறுத்துவிடுகிறது. அதனைப் பார்த்ததும் திரெளபதி தனது சேலை முகப்பைக் கிழித்து காயத்துக்குக் கட்டுப்போடுகிறார். அதனைப் பார்த்த கிருஷ்ண பரமாத்மா, நான் உன் வாழ்வின் கடினமான காலகட்டத்தில் உற்ற துணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். திரெளபதி துயில் உரியப்பட்ட சம்பவத்தின்போது அவருடைய மானம் காக்கப்பட்ட சம்பவம் இதன் பிரதிபலனாக நடந்ததாகவே கூறப்படுகிறது.