விலங்கியல் ஆர்வலர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு விலங்கையே காதலித்தவர் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா? என்ன இது புதுசா இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது உண்மை. சம்பவம் நடந்தது ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில்.


அங்குள்ள அண்ட்வெர்ப் பகுதியில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அட்டீ டிம்மர்மான்ஸ் என்ற பெண், அண்ட்வெர்ப் மிருகக்காட்சி சாலையில் பூங்காவுக்கு வாரம் தோறும் வருகை தந்து உள்ளார். அவரது செயல்பாடு வழக்கத்திற்கு மாறாக இருப்பதை  கண்டு சந்தேகம் அடைந்த மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் தொடர்ந்து நோட்டமிடத் தொடங்கினர்.


அப்போது மிருகக்காட்சி சாலையில் உள்ள சிட்டா என்ற 38 வயது ஆண் மனிதக்குரங்கு அருகே அந்த பெண் அதிக நேரத்தை செலவு செய்தது தெரியவந்தது. மனிதக்குரங்கு அடைத்து வைக்கப்பட்டு உள்ள கண்ணாடிக் கூண்டு அருகே அந்த பெண் நின்று ஏதோ பேசிக் கொள்வதும், முத்தம் கொடுப்பதையும் ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


கடந்த 4 ஆண்டுகளாக இது தொடர்ந்து வந்ததை கவனித்த விலங்கியல் பூங்கா நிர்வாகம், இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்து வருவது ஆபத்தானது என உணர்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டது. அதன் விளைவாக அந்த பெண் பூங்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.


இதுகுறித்து கருத்து  தெரிவித்து உள்ள அட்டீ டிம்மர்மான்ஸ், “நான் அந்த விலங்கை காதலிக்கிறேன். அவனும் என்னை  காதலிக்கிறான். இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. என்னை ஏன் அவர்கள் தடுக்க நினைக்கிறார்கள்.” எனக்கூறினார்.


அந்த பெண் மனிதக்குரங்குடன் உறவை வளர்ப்பது ஆபத்தானது என மிருகக்காட்சி சாலை கருதுகிறது. இது மற்ற மனிதகுரங்குகளுடன் சீட்டா உறவை வளர்ப்பதற்கு தடையாக உள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று என மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


சிட்டா மனிதர்களுடனே எப்போதும் தொடர்பில் இருப்பதால் மற்ற மனிதக்குரங்குகள் அதை தங்களுடன் சேர்த்துக்கொள்ள தயங்குவதாகவும், தங்கள் கூட்டத்தில் அதை சேர்த்துக் கொள்ள மறுப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


மிருகக்காட்சி சாலையின் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் அந்த பெண், இந்த நடவடிக்கையை நியாயமற்றது என்று குற்றம்சாட்டுகிறார். மற்ற பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார்.


ஹாலீவுட்டில் பெரும் வெற்றிபெற்ற கிங்காங் படத்தில் பெண் ஒருவர் மீது மனிதக்குரங்கு காதல் வயப்படும். இதெல்லாம் இப்படி உண்மையில் நடக்கும் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டோம்.