14 வயது சிறுமியை அவரது தாய் வழி மாமா பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் இந்த 14 வயது சிறுமி நேற்று முன் தினம் (செப். 05) இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றுள்ளார்.


இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் அந்நபர் ஊற்றியுள்ளார்.


தொடர்ந்து சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


தொடர்ந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் உடனடியாக சிறுமியை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.


பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லூர் ஊரகக் காவல் துறையினர் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 511 (பாலியல் வன்கொடுமை முயற்சி) 307 (கொலை முயற்சி) மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 


இந்நிலையில், முன்னதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரப்படுவதாகவும் நெல்லூர் கிராமப்புற காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒய் ஹரிநாத் ரெட்டி முன்னதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் நெல்லூர் காவல் கண்காணிப்பாளர் விஜய ராவ் தெரிவித்துள்ளார்.


முன்னதாக ஆந்திர மாநில விவசாயத்துறை அமைச்சர் கக்கனி கோவர்தன் ரெட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, குடும்பத்தினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய கொடுமைகளைத் தடுக்க பொதுமக்கள் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பதற்கும், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 


18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை ஆபாசமாக படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை.

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை.

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்தச் சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)