சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்டு இளம்பெண் சத்யா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சதீஷ் என்ற இளைஞர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் உறவினர்கள் புகார் கூறிய நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்(23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்தியாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 


 






அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சத்தியாவை, சதீஷ் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சத்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தியாவை சதீஷ் என்ற இளைஞர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் உறவினர்கள் புகார் கூறிய நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது சென்னையையே உலுக்கியுள்ளது.



பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது.


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.