வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம், போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கக் கடத்தல் கடல் வழியாகவும், வான்வழியாகவும் நடைபெற்று வருகிறது. விமான நிலையங்களே தங்கக்கடத்தலுக்கு முக்கிய வழித்தடமாக இருப்பதால் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.




இந்த நிலையில், ரியாத்தில் இருந்து நேற்று ஏஐ -942 என்ற விமானம் ஹைதராபாத் வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிரமாக பரிசோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரை ஸ்கேன் செய்த போது அவரது உள்ளாடையில் மர்மமான பொருள் இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை முழுமையாக  பரிசோதித்தனர். அப்போது, அவர் தனது உள்ளாடையில் ஒரு ஜிப் போன்று வைத்து தைத்துள்ளார், அந்த ஜிப்பின் உள்ளே ஒரு சிறிய தங்கக்கட்டியை கடத்திக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த தங்கத்தின் எடை சுமார் 116 கிராம் ஆகும். அதாவது, அந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 6 லட்சம் ஆகும். இந்த கடத்தலுக்காகவே இந்த உள்ளாடையை சிறப்பாக தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் சமீபகாலமாக விமான நிலையங்களில் பிடிபடும் கடத்தல் தங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டில் சென்னை, திருச்சி, ஹைதராபாத், கொச்சி, ஆகிய விமான நிலையங்களில் அதிகளவில் கடத்தல் தங்கங்கள் பிடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


கடந்த மாதம் மட்டும் ஹைதராபாத் விமான நிலையத்தில் கிலோக்கணக்கில் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த கடத்தல் தங்கங்களை எல்லாம் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல் நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க : 'ஜெய் ஸ்ரீராம்' கூறச் சொல்லி மிரட்டல்... இஸ்லாமிய ஊபர் ஓட்டுநர் மீது தாக்குதல்... காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!


மேலும் படிக்க : Crime : போதை அடிமைப்பழக்கத்தில் கூட்டு பாலியல் உறவில் ஈடுபடுகிறார்களா மாணவர்கள்? திருச்சியில் அதிர்ச்சி