உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பர் மாதம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை கொண்டாடுவர். மேலும் கிறிஸ்மஸ் தாத்தா போல் வேடமிட்டுக்கொண்டு குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள டிவிஎஸ் காலனியில் சேர்ந்த பொன் ராணி என்பவர் நேற்று இரவு தனது வீட்டிலிருந்துள்ளார். 



அப்பொழுது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்தபடி வந்துள்ளார். இதைக்கண்ட பொன்ராணியும் வீட்டுவாசலில் நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த நபர் பொன்ராணிக்கும் சாக்லேட் கொடுத்துள்ளார். சாக்லேட்டை வாங்கியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த நபர் பொன் ராணி கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். 



உடனே பொன்ராணி சத்தம் எழுப்பியநிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்றவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.