திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மனு போட்டு சந்தித்து பேசி வருகிறார்கள். கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையே 2 மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் அங்கு நின்று பேசுவதால் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் உறவினர்கள் பேசுவதை கைதிகளால் புரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக வயதான கைதிகள் அல்லது வயதான உறவினர்கள் வந்து பேசும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வதை தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.


 






 


மேலும் இதற்கு மாற்று ஏற்பாடாக வெளிநாடுகளில் உள்ளது போல் கைதிகளிடம் அவர்களுடைய குடும்பத்தினரோ அல்லது உறவினரோ இன்டர்காம் மூலம் பேசும் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. கைதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு இடையே நடுவில் கண்ணாடியை அமைத்து இருபுறமும் இன்டர்காம் வசதியுடன் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக கோவை, மதுரை சிறைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலும் இந்த வசதியை அமல்படுத்துவதற்காக ஆய்வு செய்யப்பட்டது.




இதையடுத்து கைதிகள் நிற்கும் இடத்திலும், நடுவே கண்ணாடிக்கு மறுபுறம் அவர்களுடைய குடும்பத்தினர் நிற்கும் இடத்திலும் (இருபுறமும்) தலா 22 இன்டர்காம் கருவிகள் வைக்கப்பட்டு ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக்கொண்டு பேசும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதேபோல் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையிலும் இன்டர்காம் வசதி மூலம் குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடம் கைதிகள் பேசும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மகளிர் ஜெயிலில் இருபுறமும் தலா 10 இன்டர்காம் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.