நாட்டில் குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மும்பையில் அமைந்துள்ளது முலுண்ட். இங்கு 33 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய 2வது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த 33 வயதான இளைஞர் அந்த பகுதியில் ஆடைத்தொழில் செய்து வருகிறார். அவருக்கு தன்னுடைய முதல் மனைவி மூலம் 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
கொடுமைப்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி:
இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. அந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் கடந்த 2018ம் ஆண்டு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர்.
இந்த நிலையில், அந்த இளைஞரின் இரண்டாவது மனைவிக்கு அவரின் முதல் குழந்தை மீது வெறுப்பைத் தொடர்ந்து காட்டி வந்துள்ளார். அந்த குழந்தையை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த 10 வயது சிறுமியை அந்த இளைஞரின் இரண்டாவது மனைவி, நெருப்பால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த 10 வயது குழந்தை வலியில் துடித்துள்ளது. இதைக்கண்டு மனம் நொந்து போன அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மனைவி மீது புகார்:
நவ்கோர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தனது இரண்டாவது மனைவி தன்னுடைய முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தையின் மகளை மரக்குச்சியால் அடிப்பது உள்பட கொடுமைகளை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள சிறுமிக்கு மன நல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த 10 வயது சிறுமியின் சித்தி, தன்னுடைய கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் இதுபோன்று பல இடங்களில் அதிகரித்து வருவது சமூகத்தை மிகவும் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த கொடுமை? - 6 பேரை கைது செய்த போலீஸ்! நெல்லையில் கொடூரம்
மேலும் படிக்க: திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்