நெல்லை மாநகர பகுதியில் உள்ளது மணிமூர்த்தீஸ்வம் பகுதி.. இப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு கடந்த 30ஆம் தேதி மாலை வேலையில் அப்பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டும், கஞ்சா அடித்துக் கொண்டும் இருந்த கும்பல் ஒன்று அந்த இரண்டு இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு அவர்கள் இருவரின் ஜாதியை கேட்டுள்ளனர். இருவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும், இரண்டு பேரையும் கொடூரமான முறையில் அந்த கும்பல் தாக்கியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கையில் வைத்திருந்த வாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மாலை வேளையில் இரண்டு பேரையும் பிடித்த அந்த கும்பல் நள்ளிரவு வரை கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர்கள் இரண்டு பேரின் செல்போனையும், பறிமுதல் செய்து அத்தோடு ஐந்தாயிரம் ரூபாயையும் ஏடிஎம் கார்டையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்களும் அந்த கும்பலிடம் இருந்து நிர்வாணமாக தப்பித்து வீடுகளுக்கு சென்று அங்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனையடுத்து அவர்களது உறவினர்கள் பெற்றோர் சேர்ந்து உடனடியாக படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்ததோடு, இதில் தொடர்புடையதாக சொல்லப்படும் பொன்மணி(22), நல்லமுத்து(21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன்(20) ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் (392IPCr/w, 397 IPC & 3(1)(r), 3(1)(s), 3(2)(va) SC/ST (POA) Act) கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து காவல்துறையினருடன் இணைந்து தங்களது ஊரில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு சிறந்த முன்னெடுப்பாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பட்டியலின சிறுவர்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி சிறு நீர் கழித்து அடித்து துன்புறுத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகளை தடுத்திட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கும் நிலையில் இந்த நிகழ்விற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் தற்போது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.