Honour Killing Haryana: மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்ததற்காக சொந்த தங்கையை கொலை செய்த, அண்ணன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

சாதி வெறியால் தங்கை கொலை:

ஹரியானாவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்ததன் காரணமாக, 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக் கொலை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் 28 வயது சகோதரர் கொலைக்கு திட்டம்தீட்டி கொடுத்து, தனது 30 வயது நண்பர் மூலம் அதனை செயல்படுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

வெடித்த காதல் பிரச்னை:

காவல்துறையின் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்த சகோதரர் மற்றும் சகோதரி உண்மையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எட்டா பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக ஹரியானா மாநிலம் மனேசர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், தனது சகோதரி மற்றொரு சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததும் அண்ணனுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை எட்டா நகரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் கடந்த நவம்பர் 15ம் தேதி அனுப்பியுள்ளார். ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 22ம் தேதியே, தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனேசர் பகுதிக்கு அந்த பெண் திரும்பியுள்ளார்.

தங்கையை கொடூரமாக கொலை

தனது பேச்சை கேட்காததால் தங்கையை கொலை செய்ய அந்த நபர் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது 30 வயது நண்பனின் உதவியையும் கோரியுள்ளார். இதையடுத்து திட்டப்படி, அந்த பெண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட நண்பர், காதலுக்கு உதவுவதாகவும், இளைஞருடன் சேர்ந்து ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள வழிவகை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.  இதைநம்பி கடந்த டிசம்பர் 10ம் தேதி இரவு ராம்புர சோக் பகுதியில் அந்த நபரை சந்திக்க இளம்பெண் வந்துள்ளார்.

ஆனால், அந்த நபர் உதவி செய்வதற்கு பதிலாக க்வாலியரில் உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கடுமையாக போராடியதால் அந்த பெண்ணை தாக்கியதோடு, இறுதியில் கழுத்தை நெறித்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே பகுதியில் இருந்த குப்பைகளுக்கு அடியில் உடலை புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உண்மை அம்பலப்பட்டது எப்படி?

திட்டமிட்டபடி கொலையை செய்து முடித்ததுமே, இரண்டு குற்றவாளிகளுமே சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேலும், தங்கையின் மரணத்திற்கு அவளது காதலன் தான் காரணம் என்று ஆரம்பத்தில் விசாரணையை திசை திருப்பவும் முயற்சித்துள்ளனர். அதன்படி, காதலன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், குற்றம் நடந்த இடத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பன் ஆகியோர் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இருவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், பெண்ணின் சகோதரர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூல அளித்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.