முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
கண்ணுக்கு தெரியவில்லையா?
நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் கூட எந்தாண்டு சேர்க்கப்பட்டவர்கள்? இதை முழுவதும் செய்வது தேர்தல் ஆணையம். வழிகாட்டு முறைகளை கொடுப்பதே தேர்தல் ஆணையம். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ, அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள்.
10 வருடங்கள் ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது, இந்த 10 வருடங்கள் இந்த கள்ள ஓட்டுகள் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கூட்டணி ஆட்சி இருந்தபோது கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போதும் கூட்டணியில்தானே உள்ளார்கள்? அப்போது எல்லாம் நல்ல ஓட்டா இருந்தது. இப்போது கள்ள ஓட்டா இருக்கிறதா?
வாக்காளர் பட்டியல்:
நயினார் நாகேந்திரனுக்குத் தெரியும். தெரிந்துமே கருத்து சொல்லியிருக்கிறார். பொதுவாக வாக்காளர் பட்டியல் ஒரு நேர்மையான வாக்காளர் பட்டியலாக இருந்தால், தகுதியுள்ள வாக்காளர் பட்டியலாக இருந்தால் தேர்தலைப் பொறுத்தமட்டில் தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.
இந்த பட்டியலைப் பொறுத்தமட்டில் நீக்கப்பட்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களையும் புதியதாக ஒரு முறை பார்க்க வேண்டும். பட்டியலை முழுவதும் பார்த்த பிறகே யாராவது தகுதியில்லாமல் சேர்த்துள்ளார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
திமுக-வை விமர்சிக்காமல் அரசியல் முடியாது:
பழைய அரசியல் கட்சிகளாக இருந்தாலும், புதிய அரசியல் கட்சிகளாக இருந்தாலும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. திமுக-வை விமர்சித்தால் மட்டும்தான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்ற காலகட்டத்தில், திமுக-வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே யதார்த்தம்.
எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஒரே கருத்து திமுக. மக்களிடம் வலுவான இயக்கமாக நல்லரசு நடத்தும் ஒரு முதலமைச்சராக இந்தியாவிற்கு வழிகாட்டும் முதலமைச்சராக ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய விமர்சனத்தையும் காது கொடுத்துக் கேட்க வேண்டியது இல்லை. அரசுக்கு ஆலோசனை தரும் யோசனைகளாக இருந்தால் நிச்சயமாக அதை காது கொடுத்துக் கேட்டு அதற்கான பணிகளைச் செய்வதற்கான முயற்சிகள் எடுப்போம்.
மக்கள் ஆதரவு:
மக்களிடம் இருக்கும் மக்களின் ஆதரவு பெற்ற முழுமையான இயக்கமாக திமுக-வை முதலமைச்சர் வளர்த்துள்ளார். அந்தளவு அடித்தட்டு மக்கள் வரை அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து அரசை வலுப்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.