திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சினிமா பட பாணியில் காணிக்கை உண்டியலில் குச்சியை விட்டு பணம் திருடிய மதுரையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலில் காவி உடையணிந்து மொட்டை அடித்த நிலையில் இருந்த நபர் குச்சி ஒன்றை உள்ளே செலுத்தி காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்வது போன்று கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இதை கண்ட கோவில் அலுவலர்கள் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான நபரின் புகைப்படத்துடன் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் ஏற்கனவே பணம் திருடிய உண்டியல் அருகே சென்று மீண்டும் பணம் திருட முயன்றுள்ளார். இதை கண்டதும் மறைந்திருந்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை கையும் களமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி வயது (32), இவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் கடந்த மாதம் 28-ம் தேதி கடந்த எட்டாம் தேதியும் சுவாமி தரிசனம் செய்வதுபோல் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் காணிக்கை உண்டியலிடம் சென்று பசை தடவிய குச்சி ஒன்றை எடுத்து உண்டியலுக்குள் செலுத்தி 2000 ரூபாயை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அந்த பணத்தை செலவழித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இவருடைய மனைவி இவரை பிரிந்து வாணியம்பாடியில் வசிப்பதாகவும், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சுந்தரபாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற சம்பவம் குட்டி புலி திரைப்படத்தில் கோவில் உண்டியலில் குச்சியை நுழைத்து நூதன முறையில் காணிக்கை பணத்தை திருடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த பாணியில் திருவண்ணாமலை கோவில் உண்டியலில் காணிக்கை பணத்தை மதுரையைச் சேர்ந்த நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்