டெல்லியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாச்சார்யா. 55 வயதான இவர் 1992 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. இதனிடையே திருமணமான 8 ஆண்டுகளில் மனைவியை விட்டு தபேஷ் குமார் பிரிந்து தலைமறைவாகியுள்ளார். 


அங்கிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வந்த அவர், தனியாக வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன்மூலம் வேலை வாங்கி தருவதாக பலரிடமும் மோசடி செய்துள்ளார். இதில் நீண்ட காலம் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த தபேஷ் குமார் அடுத்தக்கட்ட முடிவுக்கு சென்றுள்ளார். அதாவது திருமண வரன் பார்க்கும் இணையதளம் வாயிலாக மோசடியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதில் விவாகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை தனது இலக்காக கொண்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். 


அதன்படி கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் பணம், நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனை ஒரு வழக்கமாக நிகழ்வாகவே தபேஷ்குமார் செய்துள்ளார். மேற்குவங்கம் தொடங்கி கர்நாடகா,மணிப்பூர், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், திரிபுரா என பல மாநிலங்களிலும் தனது சித்து வேலையை தபேஷ் குமார் அரங்கேற்றியுள்ளார். 


அந்த வகையில் சமீபத்தில் தபேஷ் குமார் மீது குருகிராமில் ஒரு பெண் போலீசில் புகாரளித்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பெண்மணியை திருமணம் செய்து மூன்றே நாட்களில்  நகைகள் உட்பட ரூ.20 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தபேஷ் குமார் தப்பியோடியுள்ளார். ஒடிஷாவில் வைத்து அவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் தபேஷ் குமார் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: Crime : திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி... கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசிய கோயில் பூசாரி... என்ன நடந்தது?