பெங்களூருவில் தங்கும் விடுதிக்குள் 24 வயது பெண்ணை கொடூரமாக கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக நகருக்கு அழைத்து வரப்படுகிறார் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்த் என்.டி.டிவிக்கு பேட்டியளித்தார்.
பீகாரைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி. இவர் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் பெண்கள் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் கிருத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் கிருத்தி அறையில் தங்கியிருக்கும் தோழியின் காதலன். அவர் வேலையில்லாமல் இருப்பதால் அடிக்கடி கிருத்தியின் தோழிக்கும் அவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக உள்ளது.
இந்த சண்டையில் கிருத்தி குமாரி பெரும்பாலும் தலையிட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த நபரிடம் இருந்து தோழியை விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் கிருத்தி. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கிருத்தியை கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் விடுதி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி இருந்த அறையின் கதவைத் தட்டுகிறார். வெளியே வந்த கிருத்தியை சுவரில் தள்ளி கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கமிஷனர் தயானந்த் தெரிவித்தார். குற்றவாளியை பிடிக்க பெங்களூரு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.