சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர் செல்ல அனுமதி - மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.


யானை, சிறுத்தை, கரடி, புலிகள் நடமாட்டம்


மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் அதிகளவு செல்லும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் காவல்துறை, இந்து அறிநிலையத்துறை, வனத்துறை, சுகாதாரம், மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் சதுரகிரி மலைப்பாதையில் யானை, சிறுத்தை, கரடி, புலிகள் வன விலங்குள் நடமாட்டம் இருப்பதால் சதுரகிரி மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இருதயவியல் மருத்துவர்கள்


மேலும் சதுரகிரிக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவின் போது மலை இறங்கிய பக்தர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதயவியல் மருத்துவர்கள் குழு சதுரகிரி மலையடிவாரத்தில் அமைக்கவுள்ளதாகவும்,  தாணிப்பாறை மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இருதயவியல் மருத்துவர்கள் கொண்ட குழுவினரை 24 மணி நேரமும் அமைக்க உத்தரவிட்டனர். மலை அடிவாரத்தை தவிர மலைப்பாதைகளில்  கடைகள் அமைக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலைப்பாதைகளில் எளிதில்ல தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலைமேல் உள்ள கடைகளில் பூஜைப்பொருட்களை தவிர வேறு ஏதேனும் பொருட்களை விற்பனை செய்தாலோ, தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


மிகுந்த கண்காணிப்பு


மேலும் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட வழியாக மலைப்பாதைகளில் பாதைகள் உள்ளதால் நடந்து செல்லும் பக்தர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைக் மூலமாக தொடர்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவக்குழுவினர் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் கொட்டைகைகள் கீற்றுகள் மூலமாக அமைப்பதற்கு அனுமதியில்லை எனவும், தகர செட்டுகள் மட்டுமே அமைக்க அனுமதி எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதைகளில் இளைப்பாறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தண்ணீர் பாயிண்டுகள். அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் வனத்துறையினர் காவல்துறையினர் சுகாதாரத் துறை அதிகாரிகள் எப்பொழுதும் மிகுந்த கண்காணிப்பது இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.