வழக்கமான புகாராக வரும் சில வழக்குகள் தோண்ட தோண்ட திடுக்கிட வைக்கும். அப்படியான ஒரு வழக்கைத்தான் தற்போது தெலங்கானா போலீசார் முடித்து வைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமையாக பதிவு செய்யப்பட்ட புகார் ஒன்றில் சீரியல் ரேப்பிஸ்ட் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜகொண்டா போலீசாருக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வந்தது. ஹையாத் நகரில் பாலியல் வன்கொடுமை என்ற புகாரின் கீழ் அது தொடர்பான விசாரணை பத்தோடு பதினொன்றாக நடைபெற்றது. மீண்டும் அதேபகுதியில் இந்த மாதம் மற்றொரு பாலியல் வன்கொடுமை புகார் வந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் இந்த வழக்கில் தனிக்கவனம் செலுத்தி விசாரணையை முடுக்கிவிட்டனர்.
விசாரணையின் முடிவில் ஹுசைன் கான் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பாலியல் வன்கொடுமையாக தொடங்கப்பட்ட போலீசாருக்கு ஹுசைனின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சையை கொடுத்துள்ளது. ஒன்று, இரண்டு அல்ல மொத்தமாக 17 பெண்களை ஹுசைன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் நகைகளையும், பணத்தையும் அவர் கொள்ளையடித்து செல்வார். இதற்காக ஹுசைன் மேற்கொண்ட மாஸ்டர் பிளான் தான் போலீசாரை தலைசுற்றவைத்தது.
ஹுசைனின் கைதுக்கு பிறகு இந்த வழக்கு குறித்து பேசிய ரஜகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பஹத், 2016ம் ஆண்டு ஹைதராபாத்தின் கோபாலபுரம் போலீசார் ஒரு வழக்கின் கீழ் ஹுசைனை ஒரு வருஷம் சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமையை ஹுசைன் மாஸ்டர் பிளானாகவே செய்துள்ளார். சிட்டியில் தனியாக வசிக்கும் பெண்களை கண்காணித்து அவர்களையே டார்கெட் செய்வார் ஹுசைன். தனியாக இருக்கும் பெண்களிடம் பேசியோ, மிரட்டியோ அவர்களை தன் ஆசைக்கு இணங்கவைப்பார். அதுமட்டுமின்றி நிறைய பணம் தருவதாகவும் கூறுவார். இதற்கு தலையசைக்கும் பெண்களை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச்செல்வார்.
அங்கு நகை அணிந்திருப்பது இடைஞ்சலாக இருக்குமென்றும், யாராவது வந்தால் நகை, பணத்தை திருடி செல்ல வாய்ப்புண்டு எனவும் பெண்ணிடம் கூறி அவற்றை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்தபிறகு பெண்ணுக்கே தெரியாமல் நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிவிடுவார். பின்னர் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குவிசாரணை தொடங்கியது என்றார்.
தீவிர விசாரணைக்குப் பின் ஹுசைனை சுற்றிவளைத்த போலீசார் அவரிடம் இருந்து தங்க நகைகள், ரூ.45000 ரொக்கம், ஒரு ஸ்கூட்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தனிமையில் இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகம்படும்படியாக யாரேனும் நடந்துகொண்டால் போலீசாரை தொடர்புகொள்ளலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.