மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வைஜாபூர் தாலுகாவில் உள்ளது கோய்கான் என்ற சிறிய விவசாய கிராமம். அங்குள்ள அஜய் என்கிற 23 வயது இளைஞரை, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான கீர்த்தி மோடே என்கிற இளம் பெண் காதலித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் காதலித்த நிலையில், காதலன் அஜய், வேறு பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இளம் பெண்ணின் குடும்பத்தார் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஒரு கட்டத்தில் எதிர்ப்பு அதிகமானதால், அஜய்-கீர்த்தி ஜோடி, கடந்த ஜூன் 21 அன்று கிராமத்தை விட்டு ஓடினர். இதை அறிந்த கீர்த்தியின் குடும்பத்தார் கடும் கோபம் அடைந்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் பெண் ஓடிச்சென்றதாக அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஏளனமாக பேசியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தார் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். 

கிராமத்திலிருந்து தப்பிய காதல் ஜோடி,  புனே சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆலண்டி என்கிற பகுதியில் குடியிருந்து வந்தனர். நாட்கள் கடந்த நிலையில், தங்கள் மீதான வெறுப்பு குறைந்திருக்கும் என்கிற நம்பிக்கையில், ஊர் திரும்ப அந்த காதல்  தம்பதி முடிவு செய்தது. 

குடும்ப எதிர்ப்பை மீறி, அவர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.



இந்த தகவல், கீர்த்தியின் வீட்டிற்கு சென்றது. கீர்த்தியின் தம்பி சங்கேத் மோடே(19) மற்றும் அவரது தாய் ஷோபா எஸ்.மோடே(40) ஆகிய இருவரும், கீர்த்தி வீட்டிற்கு வந்துள்ளனர். தாய் மற்றும் தம்பியை கண்டதும் கீர்த்தி மகிழ்ச்சி அடைந்து அவர்களை வீட்டிற்குள் வரவேற்றுள்ளார்.

கீர்த்தியுடன் தாயும், தம்பியும் நன்றாக பேசியுள்ளனர். ‛எங்களுக்கு எதாவது தரலாமே...’ என தாய் ஷோபா கேட்க, ‛டீ மற்றம் ஸ்நாக்ஸ் செய்து தருகிறேன்...’ என்று கூறி, கீர்த்தி கிச்சனுக்குச் சென்றுள்ளார்.

அப்போது ்வரை பின் தொடர்ந்து தாயும், தம்பியும் உள்ளே சென்றுள்ளனர். சமைத்துக் கொண்டிருந்த கீர்த்தியின் கால்களை பிடித்து கீழே தள்ள ிய தாய் ஷோபா, அவரது கால்களை பிடித்துக் கொண்டார். அந்த நேரத்தில் தம்பி சங்கேத் மோடே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்கா கீர்த்தியின் தலையை தணியாக அறுத்து துண்டித்தார். 

அதன் பின் அக்காவின் தலையோடு செல்ஃபி எடுத்த  சங்கேத் மோடே, பின்னர் வீட்டின் வெளியே தலையை வீசிவிட்டு தாயுடன் புறப்பட்டார். 

சிறிது நேரத்தில் வீட்டில் வெளியே கிடந்த கீர்த்தியின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கோய்கான் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், தான் எடுத்த செல்ஃபி போட்டோக்களை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்த அவரது தம்பி சங்கேத் மோடோ, தனது குடும்பத்திற்கு கலங்கம் ஏற்படுத்திய அக்காவை கொன்று விட்டதாக, பெருமிதமாக தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தனது தாய் ஷோபா உடன், கோய்கான் காவல்நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்ததற்காக, சொந்த மகளை, மகனுடன் சேர்ந்து தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.