அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் தேனி எம்பி ரவீந்திரநாத் மீதான தேர்தல் மனுத்தாக்கலில் விபரங்களை மறைத்த வழக்கில், பிப்ரவரி 7 ம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதனால், டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐக்கள் கொண்ட 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது குறிப்பிட்ட சில விபரங்களை மறைத்ததாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 125 ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 7க்குள் முடித்து, விசாரணை இறுதி அறிக்கையை தனி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது மறைத்ததாக கூறப்படும் தகவல்களை திரட்டுவதில் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, ஓபிஎஸ் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, அவர் சமர்ப்பித்த வேட்புமனுத்தாக்கல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தாக்கல் செய்த விபரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஓ.பன்னீர்செல்வம் படித்த உத்தமபாளையம் கல்லூரி, நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, பெரியகுளத்தில் ஒரு வீட்டினை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று வாங்கியது உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி வாங்கியுள்ள சொத்துக்கள், தனியார் நிறுவன பங்குகள் குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி, சுமார் 20க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆவணங்களை திரட்டும் பணியில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தரராஜ் தலைமையில் 20 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ம் தேதி இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், இக்குழுவினர் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்