உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பாகம்பரி மடத்தின் தலைமை சாமியாரான மஹந்த் நரேந்திர கிரி கடந்த செப்டம்பர் 20 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. நரேந்திர கிரி தனது புகைப்படத்தைத் தனது சீடர் அனந்த கிரி ஆபாசமாகச் சித்தரித்து, ஒரு பெண்ணோடு இருப்பது போல மார்ஃப் செய்து, வைரலாக்கத் திட்டமிட்டிருப்பதால் அச்சம் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 


இந்தத் தற்கொலைக் குறிப்பின் படி, மகந்த் நரேந்திர கிரி கடந்த செப்டம்பர் 13 அன்று தற்கொலை செய்ய முயன்றதாகவும், அதற்குத் தைரியம் இல்லாமல் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 பக்கங்கள் கொண்ட இந்தத் தற்கொலைக் குறிப்பில் எழுதப்பட்டிருந்த செப்டம்பர் 13 என்ற தேதி திருத்தப்பட்டு, செப்டம்பர் 20 என மாற்றப்பட்டுள்ளது.



அனந்த் கிரி


 


`என் சீடர் அனந்த கிரி எனது புகைப்படத்தை ஒரு பெண்ணோடு ஆபாசமாக இருப்பது போல சித்தரித்து, வைரலாக்கத் திட்டமிட்டுள்ளதை அறிந்தேன். அப்படியொன்று நிகழ்ந்தால், நான் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது என்னுடைய நற்பெயரைக் கெடுத்துவிடும்’ எனத் தனது தற்கொலைக் குறிப்பில் அச்சம் தெரிவித்துள்ளார் மறைந்த சாமியார், மஹந்த் நரேந்திர கிரி. 


`நான் எந்தப் பெண்ணுடனும் இருந்ததில்லை என்ற உண்மையை மக்கள் காலப் போக்கில் கண்டுகொள்வர்.ஆனால் அதற்குள் எனது நற்பெயர் கெட்டுவிடும். நான் தலைமைதாங்கும் இந்தப் பதவி முகவும் முக்கியமானது என்பதால் அதற்கு ஏற்படும் களங்கத்தில் இருந்து என்னால் மீள முடியாது. அதற்கு நேரும் துன்பங்களை என்னால் காண முடியாது. அதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது மரணத்திற்குக் காரணமானவர்கள், அனந்த் கிரி, பிரபா திவாரி, அவரது மகன் சந்தீப் திவார் ஆகியோர்’ எனவும் அந்தத் தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.   



தனது தற்கொலைக் குறிப்பில், தான் பணம் திருடியதாகத் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நரேந்திர கிரி, தனது மடத்தின் வளாகத்திலுள்ள பூங்காவில் தான் தியானம் செய்யும் மரத்திற்கு அருகில் தனக்கு சமாதி கட்டுமாறு தனது பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். `நான் எந்தப் பணத்தையும் திருடவில்லை. மடத்தின் வளர்ச்சிக்காகவும், கோயில்களுக்காகவும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் செலவிட்டுள்ளேன்’ எனத் தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


மஹந்த் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைத்துள்ள அலகாபாத் காவல்துறை, அனந்த் கிரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்த தகவல்கள் வெளியாகியவுடன், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலானோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.