மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமன் என்ற ராணுவ வீரர் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியன் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் 26 வயதான ராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் இணைந்து, தற்போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், விடுமுறையின்போது உசிலம்பட்டிக்கு வந்தபோது ராமனுக்கும், பட்டதாரி பெண் ஒருவருக்கும் நட்புடன் கூடிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இப்படியான சூழலில் ராணுவ வீரர் ராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பட்டதாரி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பட்டதாரி பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
கருவை கலைத்தால்தான் திருமணம்:
இந்தசூழலில் தான் கர்ப்பமாகி விட்டதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் அந்த பெண் ராணுவ வீரன் ராமனிடம் கேட்டுள்ளார். அப்போது ராமன் அந்த பெண்ணிடம் கருவில் இருந்த குழந்தையை கலைத்தால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனை முழுமையாக நம்பிய அந்த பெண், ராமனின் பேச்சைக்கேட்டு குழந்தையை கருவில் இருந்தபோதே கலைத்துள்ளார். அதன்பிறகு, அந்த பெண் ராமனிடம் இதுகுறித்து சொன்னபோது, திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பின், உசிலம்பட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். அந்த பட்டதாரி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணைக்கு ஆஜராகும்படி ராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ராணுவ வீரர் ராமன் ஆஜராகியுள்ளார்.
தொடர்ந்து, ராமனை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். அந்த நேரத்தில், காவல் நிலையம் முன்பு நின்றிருந்த ராணுவ வீரர் ராமனின் உறவினர்களும், பட்டதாரி பெண்ணின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராணுவ வீரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.