ஏ.டி.எம்., கார்டு மாயம்
மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது 72). இவரது, பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் காய்கறிகடை வைத்து நடத்தும் லட்சுமணன் என்பவர் 10 வருடங்களாக கிருஷ்ணசாமிக்கு பழக்கம் என்பதால் வீட்டிற்கு தினமும் லட்சுமணன் சிறு சிறு உதவிகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் தேதியன்று வங்கிக்கு சென்றுவிட்டு லட்சுமணனின் காய்கறிகடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் தனது பேக்கில் இருந்த பர்சை தேடி பார்த்ததாகவும் ஏ.டி.எம் கார்டை காணவில்லை என்றும் எங்கோ ஞாபக மறதியாக வைத்து விட்டோம் என தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 15ஆம் தேதியன்று கிருஷ்ணசாமியின் செல்போனுக்கு ஒரு நகைக்கடை பெயரில் 15 மற்றும் 16ஆம் ஆகிய தேதியில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 810 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
திருடிய காசில் நகை
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி காய்கறி கடைக்காரரான லட்சுமணனை உதவிக்கு அழைத்துக்கொண்டு வங்கிக்கு சென்று விசாரித்துவிட்டு, ஏடிஎம் கார்டை லாக் செய்துள்ளார். பின்னர் நகைக்கடைக்கு சென்று கிருஷ்ணசாமி விசாரித்தபோது பெண் ஒருவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி 2 பவுன் நகையும் மறுநாள் 2 பவுன் நகையும் ஒன்றரை கிராம் நகையும் எடுத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி கடைசியாக லட்மணனின் கடையில் வைத்து பையை எடுத்தது ஞாபகம் வந்த நிலையில் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது லட்மணன் மற்றும் அவரது தோழியான நாகேஸ்வரி என்ற பெண்ணை அழைத்துவந்து, நாங்கள் உங்களது நகையை கண்டுபிடித்து தருகிறோம் என கூறியபோது கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் தனக்கு தெரிந்த நபர் மூலமாக புகார் அளிக்கவுள்ளேன். அப்போது, தான் தான் உண்மை தெரியவரும் என கூறியுள்ளார்.
புகார் அளிக்க வேண்டாம்
இதனால் பதற்றமடைந்த லட்சுமணன் மற்றும் அவரது தோழி நாகேஸ்வரி ஆகிய இருவரும் 17 ஆம் தேதி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் கிருஷ்ணசாமியிடம் பேசிய லட்சுமணன் ”நான் தான் நீங்க கடைக்கு வந்தப்ப உங்க பர்ஸ எடுத்து அதில் எழுதியிருந்த பின் நம்பரை வைத்து நகையை வாங்கி அதை அடகு வைத்துவிட்டோம் என கூறியதோடு புகார் அளிக்க வேண்டாம்” என கூறியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி தனது உறவினர் மூலமாக மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் லட்சுமணன் மற்றும் நாகேஸ்வரி மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் காய்கறி கடைக்காரரான லட்சுமணன் மற்றும் அவரது தோழியான நாகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறி கடைக்கு வந்த டெய்லர் தோழிக்கு உதவி செய்ய நம்பி வந்த வாடிக்கையாளரிடம் ஏடிஎம் கார்டு திருடி நகை வாங்கிய காய்கறி கடைக்காரர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.