மயிலாடுதுறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் நாவில் எச்சில் ஊறும் வகையில் பாரம்பரியமான முறையில் தயாராகி வருகிறது பிளம் கேக்கு.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் பிளம் கேக்
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் பிரதான பண்டிகையாக கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த பண்டிகை காலங்களில் அயல்நாட்டு முறையில் தயாரிக்கப்படும் பிளம் கேக் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவில் பிளம் கேக்கின் பிறப்பிடமாக கேரள மாநிலம் உள்ள நிலையில் காலப்போக்கில் அங்கிருந்து நாடும் முழுவதும் அதன் தயாரிப்பு விரிவாக்கம் அடைந்தது. தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நம் மக்கள் மனதில் பிளம் கேக் முக்கிய அங்கம் வகித்து நீங்க இடம் பிடித்துள்ளது .
மயிலாடுதுறை பிளம் கேக்
இதனிடையே இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அயல்நாட்டு முறையில் பாரம்பரியம் மாறாமல் கேக் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிளம் கேக் மூலப்பொருட்கள்
பல மாதத்திற்கு முன்பாகவே உலர்ந்த பழ வகைகள் , திராட்சை, பேரிச்சை பழம், செர்ரி பழம், நட்ஸ் வகையிலான முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் இதற்கெல்லாம் சுவை சேர்க்கக்கூடிய முக்கியமான பானம் பழவகை ஒயின், ரம், மூலிகைப் பொருட்களான பட்டை, லவங்கை, மஞ்சள், மிளகு, ஸ்டார் பத்ரி, சீரகம் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு அனைத்தையும் கலவியாக்கி செய்யப்படும் இந்த பிளம் கேக்குக்கு தனிச்சுவை உண்டு எனவே சொல்லலாம்.
சூடுபிடித்த பிளம் கேக் விற்பனை
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மிகப்பெரிய அங்கமாக இந்த பிளம் கேக் விளங்கி வருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் இதனை வாங்கிச் செல்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கான பிளம் கேக்குகள் தயார் நிலையில் உள்ள நிலையில் பண்டிகை காலம் முடிந்த பிறகும் மக்கள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் அதற்கான தயாரிப்பு பணிகளையும் கடை உரிமையாளர்கள் துவங்கியுள்ளனர்.
வாடிக்கையாளருக்கு அனுமதி
இந்தப் பிளம்கேக் தயாரிக்கும் முறையினை பொதுமக்கள் நேரடியாக பார்ப்பதற்கு கடை உரிமையாளர் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள் நேரடியாக வந்து பிளம்கேட் தயார் செய்யும் முறையை நேரடியாக பார்த்து தாமும் பங்கெடுத்து பிளம்கேக் தயாரிக்கும் பணியில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இதைப் பற்றி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் நேரடியாக இந்த ப்ளம்கேக் தயாரிக்கும் பணியினை நம் கண் முன்னே காண்பித்து, எங்களையும் அதில் பங்கெடுக்க வைத்துள்ளனர். நாங்களும் சேர்ந்து இந்த பிளம் கேக்கை தயார் செய்தோம். அது எங்கள் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த பிளம் கேக்கில் நிறைய மூலிகை கலந்த பொருட்கள் பழங்கள் உள்ளிட்ட சத்து நிறைந்த பொருட்கள் கலக்கிறார்கள். இந்த அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஒரு டன் அளவிற்கு தயாரிக்கப்படும் இந்த பிளம் கேக்குகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது என்பதால் அனைத்து தரப்பு மக்களும் வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் , பண்டிகை காலம் நெருங்க நெருங்க இதன் விற்பனை சீக்கிரமே முடிந்து விடும் எனவும் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். பிளாக் பாரஸ்ட் , ஒயிட் ஃபாரஸ்ட் என விதவிதமான கேக்குகள் பேக்கரிகளில் சந்தைப்படுத்தப்பட்டாலும் பிளம் கேக்குகள் என்றுமே நம்மை சுவைக்க தூண்டும் என சொல்லலாம்.