தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் மாணவர்கள் தவித்து வருவதாகவும் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு உயர்‌ கல்வித்துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ 13 மாநிலப் பல்கலைக்கழகங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில் ஆறு பல்கலைக்கழகங்களில்‌ துணைவேந்தர்‌ பணியிடம்‌ காலியாக உள்ளது. குறிப்பாக,



  1. பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌

  2. தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை

  3. சென்னைப் பல்கலைக்கழகம்‌, சென்னை

  4. அண்ணா பல்கலைக்கழகம்‌, சென்னை

  5. அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சிதம்பரம்‌.

  6. மதுரைக்‌ காமராசர்‌ பல்கலைக்கழகம்‌, மதுரை ஆகிய இடங்களில் துணை வேந்தர் பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.


என்ன காரணம்?


மேலும்‌, திருச்சி, பாரதிதாசன்‌ மற்றும்‌ சேலம்‌, பெரியார்‌ பல்கலைக்கழகங்களின்‌ தற்போதைய துணை வேந்தர்களின்‌ பதவிக்காலம்‌ முடிந்த நிலையில்‌ அவர்களது பணிக்காலம்‌ நீட்டிக்கப்பட்டது. அவை முறையே பிப்ரவரி 2025 மற்றும்‌ மே 2025ல்‌ முடிகின்றன. துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில்‌ உள்ள பல்கலைக்கழகங்களின்‌ சட்ட விதிகளின்படி துணைவேந்தர்‌ அவர்களை தேர்வு செய்வதற்கு அமைக்கப்படும்‌ தேடுதல்‌ குழுவில்‌ ஆளுநரால் பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌, அரசால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக ஆட்சிக்குழு / ஆட்சிப்பேரவையினால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஆகிய மூன்று நபர்களைக்‌ கொண்ட தேடுதல்‌ குழு அமைக்கப்படும்‌. ஆனால் யுஜிசி 2018 விதிகளின்படி, யுஜிசி உறுப்பினரை இதில் இணைக்கவேண்டும் என்று ஆளுநர் கூறுகிறார்.


 


தமிழக அரசு சொல்வது என்ன?


தற்போதைய விதிகளின்படி மாநில அரசுக்குப் பெரும்பான்மையாகத் தேர்வு செய்யும் முடிவு உள்ளது. இறுதியில் துணை வேந்தரை ஆளுநரே தேர்வு செய்வார் என்பதால், புதிய விதிகளின்படி முடிவெடுக்கும் உரிமை மத்திய அரசின்வசம் செல்லும். இதனால் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.


இந்த நிலையில் துணை வேந்தர் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டே தாங்கள் நடந்துகொள்வதாக தமிழக அரசு வாதிட்டு வருகிறது. 


என்ன பிரச்சினை?


ஆளுநர்- மாநில அரசு என இரு தரப்பும் அடித்துக்கொள்வதால், துணைவேந்தர் இல்லாமலேயே 6 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் பட்டமளிப்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.


அதேபோல ஆராய்ச்சி மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு, சிண்டிகேட், செனட் உறுப்பினர் நியமனத்தில் பிரச்சினை, ஓய்வுபெற்ற பேராசிரியர்களின் ஓய்வூதியம், பணப்பலன்களை பெறுவதில் தாமதம் ஆகிய பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.