மதுரை டி.வி.எஸ் நகரை சேர்ந்த தனியார்  துணிக்கடை உரிமையாளர் அழகர் மகள் வர்ஷா ( 24 ) என்பவருக்கும், கே.புதூரை சேர்ந்த மின்வாரிய உதவி இயக்குநர் கொண்டல் ராஜ் மகன் ஜனார்த்தனன் என்பவருக்கும் கடந்த 2020 மார்ச் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.






திருமணத்திற்கு முன்பே  -2019 அக்டோபர் மாதம் மணமக்கள் பெயரில் நிலம் வாங்க வேண்டும் எனக்கூறி அழகரிடம் இருந்து 23 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட கொண்டல்ராஜ், 300 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு வாங்கிக் கொண்டு 1.5 கோடி ரூபாய் செலவில் திருமணத்தை நடத்தியுள்ளார்.




ஜனார்த்தனன் ஐடி துறையில் பெரிய பொறுப்பில் பணியாற்றுவதாக பொய்யான தகவலை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்னர் ஜனார்த்தனனும் அவரது தந்தை கொண்டல்ராஜும் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை செய்து வர்ஷாவை அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அழகர் நடத்தி வந்த ரெடிமேட் கடையையும் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

 

கணவரின் குடும்பத்தினர் செய்த தொடர் கொடுமைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷா ஷாம்பூவை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவருக்கு குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்த துன்புறுத்தல் இறுதியாக கொலை மிரட்டல் வரை சென்றுள்ளது.



இந்த விவகாரங்கள் குறித்து திலகர்திடல் மகளிர் காவல் நிலையத்தில் வர்ஷா அளித்த புகாரை தொடர்ந்து, வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொண்டல்ராஜ், அவரது மனைவி சுமதி மற்றும் மகன் ஜனார்த்தனன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கொண்டல்ராஜும் அவரது மனைவி சுமதியும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஜனார்த்தனன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.