மது போதையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை  உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்து உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக உள்ளதால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.


திருச்சியைச் சேர்ந்த ஜான் கென்னடி. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுதொடர்பான வழக்கில் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கீழமை நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, "மனுதாரரின் மனைவி மனுதாரர் மற்றும் 4 குழந்தைகளை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் 11 வயது மகள், சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சைல்டு லைனுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தை பருவம் எய்தாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தாய் பிரிந்து போன நிலையில் தந்தை  தாயின் அரவணைப்பையும் வழங்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் மிருகம் போல மனுதாரர் நடந்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக தனது மகளுக்கும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பது தனக்கு தெரியவந்ததால், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பருவம் எய்தாத 11 வயது சிறுமி, வீட்டின் உரிமையாளரோடு தவறான தொடர்பு இருப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மனுதாரர் தான் தப்புவதற்காக இது போன்ற குப்பை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


தாயும், தந்தையும் அவரவர் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், நான்கு குழந்தைகளில் மூத்தவரான பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நடந்தது குறித்து தனது உடன்பிறந்தோருடன் பகிர்ந்து கொள்ள இயலாத கொடூர சூழலில் இருந்துள்ளார். குற்றமும் சாட்சிகளோடு நிரூபிக்கப்பட்ட பின்னரே கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. ஆகவே இந்த வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண