இன்று அநேகமானோர் தங்களுடைய இல்லங்களில் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். பெரும்பாலானோர் வீட்டில் நாய்கள் ஒரு குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டனர். செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்களை விடவும் அளவுகடந்த அன்பை அவைகள் மீது செலுத்துகின்றனர். ஆனால் வளர்க்கும் செல்லப்பிராணிகளோ அன்பு செலுத்துவதில் எஜமானார்களேயே மிஞ்சிவிடுகின்றனர். 



 

பெரும்பாலானோர் வீடுகளில் குழந்தைகளின் பிடிவாதத்திற்காகவே செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்கின்றனர். நாய்களுக்கு இருக்கும் நன்றி வேறு எவருக்கும் இருக்க முடியாது. அவைகள் வீட்டில் இருக்கும் போது பொழுது போவதே தெரியாத அளவிற்கு நம்மை பிஸியாக வைத்திருக்கும். நமது வீட்டுக்கு ஒரு பாதுகாவலராக இருக்கும்.

  

செல்லப்பிராணிகளுக்கு ஐந்தறிவு மட்டுமே இருந்தாலும் அவைகளிடம் இருந்து நாம் பல நல்ல விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். அவை எந்த ஒரு வேலை செய்தாலும் அதனுடைய கவனம் சிதறாமல் அதனை முடிக்கும். எப்போதும் விழிப்புணர்வோடு இருக்கும், எளிதில் நட்பு பாராட்டும், அன்பை முழுமையாக வெளிப்படுத்துதல், விளையாடுவதில் மிகுந்த ஆர்வம், அறிவுக்கூர்மை, மற்றவர்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் எளிதில் புரிந்து கொள்ளுதல், ஒழுக்கம் என பல நல்ல தகுதிகளை கொண்டிருக்கும். மனிதர்களாகிய நாம் அவைகளிடம் இருந்து இவை அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும். 



 

இந்த பாசம் ஒரு படி மேலேபோய் தங்களுடைய படுக்கையை தங்களது செல்லப்பிராணிகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றனர். அவைகளை தனிமையில் விட மனமில்லால் தங்களுடன் தூங்க அனுமதிப்பதால் பல நன்மைகளும் உண்டு தீமையும் உண்டு. 

 

நன்மைகள்: 

 

செல்லப்பிராணிகளுடன் உறங்குவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கலாம், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை போன்ற சிக்கல்கள் இருந்தால் அது சரியாகும். உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் அதனுடன் உறங்குவது உங்கள் மீது உள்ள பாசத்தை மேலும் அதிகரிக்கும். இருவருக்கும் இடையில் உள்ள பிணைப்பு கூடும். 

 



 

தீமைகள் : 

 

உங்களுக்கு ஆஸ்துமா அல்லது அல்ர்ஜி இருக்குமாயின் செல்லப்பிராணிகளுடன் உறங்குவதை தவிர்ப்பது நல்லது. இது உங்களது நிலைமையை மேலும் மோசமாகி விடும். செல்லப்பிராணிகளின் ரோமம் மற்றும் அதன் உடலில் இருக்கும் அழுக்குகள் உங்களுக்கு இருக்கும் பிரச்சினையை மேலும் அதிகரித்துவிடும். செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் ஒட்டுண்ணிகள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. அவை ஏதாவது ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் உடனே விழித்து கொள்ளும். அதனால் உங்களுடைய உறக்கம் பாதிக்கப்படும். 

 

எனவே செல்லப்பிராணிகளுடன் உறங்குவது உடல் ஆரோக்கியம், குடும்ப சூழல் போன்ற அவரவர் நிலைமையை பொருத்து முடிவு செய்து கொள்ளலாம்.