போலீஸ் விசாரணையில் உயிரிழந்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணையின்போது, காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த அஜித்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத் அஜித்தின் உடலில், காயங்கள் குறித்து பார்வையிட்டார். பின்னர் அஜித்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தாயார், சகோதரர் மற்றும் குடும்பத்தினர் நேரில சென்று பிணவறையில் அஜித்குமாரின் உடலை பார்வையிட்ட பின்னர் உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
 
மாஜிஸ்திரேட்டிடம் மனு
 
பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுசெய்யப்பட்டு நடைமுறையின்படி உடற்கூராய்வு நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித், உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இதுபோல சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அஜித் குடும்பத்தினர் சார்பில் மாஜிஸ்திரேட்டிடம் மனு வழங்கினர். பின்னர் அஜித்குமாரின் உடலானது உடற்கூராய்விற்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
 
24 லாக்கப் மரணம்
 
இந்நிலையில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு ராஜராஜன், மாரிஸ் குமார், மற்றும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியன், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தனர். மடப்புரம் கோயிலில் பணியில் இருந்த காவலாளி, அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும், என முறையீடு செய்தனர். அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லாக்கப் டெத் நடந்துள்ளது, என நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
 
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
 
அப்போது நீதிபதிகள் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் 24 லாக் அப் டெத் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரம் என்ன என கேள்வி எழுப்பினார்கள். மேலும் அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா அவரை தூக்கிட்டு போய் அடித்து கொலை செய்துள்ளீர்கள். ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
 
வழக்கை எடுத்துக் கொள்ள முடிவு
 
அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்.. மனுதாரர் மனுவாக பதிவு செய்யுங்கள் நாளைய விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்து நாளை வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.