ஆளை மாற்றி கொன்ற கும்பல்... மதுரை இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்- என்ன நடந்தது?

ஆள்மாறாட்டத்தில் அழகர்சாமி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இருப்பினும், கல்மேடு பகுதியை சேர்ந்த நபரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

மதுரை அருகே நடந்த இசைக்கலைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஆளை மாற்றி கொலை செய்தது உறுதியாகி உள்ளது.

இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

 
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் அழகர்சாமி (வயது 19). டிரம்ஸ் இசை கலைஞர். அவ்வப்போது கட்டடப் பணியும் செய்து வந்தார். இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி அதிகாலையில் அவரது வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், வீட்டு வாசலில் வைத்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), அலங்காநல்லூரை சேர்ந்த வினோத்குமார் (26), திருப்புவனத்தை சேர்ந்த சூர்யா (24), விரகனூரை சேர்ந்த ராம்பிரகாஷ்பாண்டியன் (20), சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
 

ஆள்மாறாட்டத்தில் அழகர்சாமி கொலை 

 
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: அலங்காநல்லூரில் கடந்த அக்டோபர் மாதம் கள்ளக்காதல் விவகாரத்தில் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சரவணன் மனைவி, அவரது கள்ளக்காதலன் மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், சரவணன் கொலையில் கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சரவணனின் அக்கா மகன்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் மூலம், மதுரை கல்மேடு பகுதியில் அந்த நபர் குறித்த போட்டோ ஒன்றை பயன்படுத்தி அந்த நபரை தேடியுள்ளனர். அப்போது, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தவறாக, அழகர்சாமியை கை காட்டியுள்ளதாக தெரிகிறது. அதன்படியே அழகர்சாமி கொலை செய்யப்பட்டுள்ளார். சரவணன் கொலைக்கும், அழகர்சாமிக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவருகிறது. ஆள்மாறாட்டத்தில் அழகர்சாமி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இருப்பினும், கல்மேடு பகுதியை சேர்ந்த மதன் கூட்டாளி ஒருவரை பிடித்து விசாரிப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola