சிறந்த காவலருக்கான பாராட்டு சான்று வாங்கிய தனிப்படை காவலர் உடல் எறிந்த நிலையில் சடலமாக மதுரையில் மீட்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்படை காவலர் மனைவி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். இவருக்கு பாண்டிசெல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரினர் சுபநிகழ்வுக்கு பைக் மூலமாக சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த நிலையில் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவலர் உடல் மீட்பு
இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்துவந்துள்ளார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் பைக் மூலமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி அனுமதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் எங்கு சென்றார்.? என்பது தெரியாத நிலையில் காணவில்லை என உறவினர் தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா.? தற்கொலையா.? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட காவலர் மலையரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் உடல் எறிந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில் பல்வேறு வழக்குகளை விசாரணை செய்யும் தனிப்படை காவலர் என்பதால் ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் மலையரசனை வேறு இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு உடலை வீசி செல்லப்பட்டிருக்கலாம் என மலையரசனின் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
உறவினர் சாலை மறியல்
இதனிடையே காவலர் மலையரசனின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே சாலையோரம் காவலர் மலையரசனின் செல்போன் கண்டறியப்பட்டுள்ளது. இதனை எடுத்த நபரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் காவலர் மலையரசனின் பைக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பைக்கில் மலையரசனுடன் யாரும் வந்தார்களா என்பது குறித்து சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை காவலர் மலையரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணையை விரைவாக நடத்தும் வரை தாங்கள் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி காவலர் மலையரசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப்படை காவலர் மலையரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறந்த காவலருக்கான சான்று பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிப்படை காவலர் மலையரசனின் மனைவி சில வாரங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் மலையரசன் உடல் எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை கிளப்பியுள்ளது.